Share via:
தேவர் ஜெயந்தி என்றாலே ஆளும் கட்சியின் முதல்வர், எதிர்க்கட்சித்
தலைவர் தொடங்கி அத்தனை லெட்டர் பேடு கட்சிகளும் ஆஜராவது வழக்கம். இது ஜாதி மரியாதை
அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் விஜய் சென்னை நந்தனத்தில் இருக்கும்
பசும்பொன் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த இருப்பதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளன.
வரும் 30ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை பிரமாண்டமாக நடைபெற
உள்ளது. இதில் முதல்வர் விஜய் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஏனென்றால், காலகாலமாக
முதல்வர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாகவே இது இருக்கிறது.
எம்.ஜி.ஆர். தொடங்கிவைத்த இந்த மரியாதையை ஜெயலலிதாவும் தொடர்ந்தார்.
அதோடு தேவர் பெருமகனாருக்கு 13 கிலோ
தங்க கவசம் கொடுத்தார். இதையடுத்து ஆட்சி புரிந்த எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என அனைத்து முதல்வர்களும் பசும்பொன்னுக்குச்
சென்று தேவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
‘இம்மானுவேல் சேகரனுக்கு நேரில்
செல்லாமல் தேவர் குருபூஜைக்கு மட்டும் செல்வது சரியல்ல. இது ஒரு பக்க ஜாதி அரசியலுக்கு
ஊக்கம் கொடுப்பதாக அமையும்’ என்று உளவுத்துறை கூறியிருக்கிறது. இதை விஜய் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஏனென்ரால், ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவராகவே தன்னை அனைவரும் பார்க்கவேண்டும்
என்று விஜய் விரும்புகிறார்.
அதனால் தேவர் குருபூஜை என்று
நாடகம் போடாமல், உண்மையான அஞ்சலியை சென்னையில் செலுத்தினாலே போதும் என்ற முடிவுக்கு
வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் முக்குலத்தோர்
வாக்குகள் கிடைக்காது என்று சிலர் சொல்வதை விஜய் நம்புவதற்குத் தயாராக இல்லை. அனைத்து
ஜாதிக்கும் அனைத்து மதத்துக்குமான முதல்வர் என்று தன்னை அழைப்பதற்கே ஆசைப்படுகிறார்.
அதனால், தேவர் குரு பூஜைக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதை தவிர்ப்பார் என்றே சொல்லப்படுகிறது.
இது ஒரு நல்ல மாற்றம். ஜாதிக்கு
முக்கியத்துவம் கொடுத்து ஓட்டு வாங்க நினைக்காமல், எல்லோருக்குமான தலைவராக மாறுவது
விஜய்யின் துணிச்சலைக் காட்டுகிறது. மக்கள் முன்னிலும் அதிகமாக அன்பு செலுத்துவார்கள்
என்றே சொல்லப்படுகிறது.
அதேநேரம், எப்படியாவது பசும்பொன்னுக்கு
வரவழைத்து தங்கள் பலத்தைக் காட்டுவதற்கு முக்குலத்தோர் இன்னமும் முயற்சியைக் கைவிடாமல்
தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார்கள்.
விஜய் அசைவாரா என்று பார்க்கலாம்.

