Share via:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்த விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பனையூரில் முகாமிட்டுள்ளனர்.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தற்போது அரசியல் விமர்சகர்களையும், திரையுலகினரையும் பல்வேறு வகையில் யோசிக்க வைத்துள்ளது. நடிகர் விஜய்யின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் கண்ணில் விளக்கெண்ணையை விட்டு ஆராய்ந்து வருகின்றன.
நடிகர் விஜய் லியோ திரைப்படத்தின் பணியில் முழுவீச்சாக ஈடுபட்டு வந்தாலும், தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் திரளாக வந்து பங்கேற்றுள்ளனர்.
தொகுதி வாரியாக மகளிர் அணி நிர்வாகிகளை எவ்வாறு நியமிப்பது என்பது பற்றி ஆலோசிக்கவும், மகளிர் அணியை சிறப்பாக கட்டமைக்க என்னென்னு உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்பது பற்றியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்துடன் சேர்த்து அவரின் விஸ்வரூப அரசியல் பிரவேசத்தையும் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.