Share via:
தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல்
தேவா இன்று காலை மரணம் அடைந்தார். அவர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
முதல்வர் விஜய். அப்போது, துக்கம் தாளாமல் கதறி அழுத ஸ்ரீகாந்த் தேவாவிற்கு முதல்வர்
ஜோசப் விஜய் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
அவரது மறைவுக்கு விஜய் கொடுத்திருக்கும் அஞ்சலி குறிப்பில்,
‘’தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பு, கானா பாடல்களால் மக்களைக் கவர்ந்தவருமான
தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும்,
ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில்
400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே
பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின்
இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். இசையமைப்பாளர்
திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்,
திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்
தெரிவித்துக் கொள்கிறேன்..’’ என்று கூறியிருந்தார்.
பிரபல இசையமைப்பாளர் ‘தேவா உடல்நலக்குறைவு காரணமாக சூர்யா மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சுமார்
8.30க்கு சிகிச்சை பலனின்றி திடீரென காலமாகிவிட்டார்.
சென்னை மயிலாப்பூரில் பிறந்த தேவா, தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில்
400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மாட்டுக்கார மன்னர் என்ற படம்
மூலம் 1986-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பிரசாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் பிரபலமடைந்த தேவா, சகோதரர்
சந்திர போஸுடன் இணைந்து இசைக்குழுவை நடத்தி வந்தார். தமிழ் சினிமாவில் கானா பாடல்கள்
என்றாலே தேவா என்ற நிலை இருந்தது..
ரஜினியின் அண்ணாமலை, பாஷா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர்.
அதோடு ரஜினி என்ற பெயர் அறிமுக பிஜிஎம்-ஐ உருவாக்கியவர் தேவா தான். கடைசியாக சாருகேசி
படத்துக்கு இசை அமைத்தார்.
விஜய்யின் ஆரம்ப கால படங்களான செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா,
விஷ்ணு, மாண்புமிகு மாணவன் போன்ற படங்களுக்கு இசையமைத்தார். இவரது இசையில் விஜய்க்கு
நேருக்கு நேர், குஷி, நெஞ்சினிலே, மின்சாரக்கண்ணா, பகவதி போன்ற படங்கள்செம ஹிட் அடித்தன.
இசையுலகிற்கு தேவா ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், அவரது
இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

