News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். தக்கலை போலீசார் மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ், ‘’பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் அவலம் தொடர்கிறது: மது எளிதாக கிடைப்பதை தடை செய்ய வேண்டும்! கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நீட், ஜே.இ.இ., கியூட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் சென்ற மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து துணை உணவுகளுடன் மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள் மதுக்கூடங்களாக மாறி வருவது மிகவும் கவலையளிக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மது அருந்துவது இப்போது தான் புதிதாக நடக்கும் ஒன்றல்ல. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இத்தகைய நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வுகள் ஒவ்வொருமுறையும் வெளிவரும் போதெல்லாம் இளைய சமுதாயம் எங்கே செல்கிறது? என்ற கவலையும், அதை விட அதிகமாக, எதிர்காலத் தூண்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய குழந்தைகளை அரசும், சமூகமும் சீரழிக்கின்றனவே? என்ற ஆத்திரமும் தான் ஏற்படுகின்றன.

இத்தகைய நிகழ்வுகளை முற்றிலுமாக தடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இளைய தலைமுறையினருக்கான பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் தவெக ஆட்சியிலும் இத்தகையக் கொடுமைகள் தொடர்கின்றன. அரசு பள்ளியில் மாணவிகள் மது அருந்தியதைத் தடுக்கத் தவறியதற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், மிகவும் எளிதாக மது கிடைக்கும் சூழலை உருவாக்கிய ஆட்சியாளர்களையும், வகுப்பறையில் அமர்ந்து மது அருந்துவதை ஒரு சாகசமாகக் கருதும் மனநிலையை மாணவர்களிடம் ஏற்படுத்தியவர்களுக்கும் என்ன தண்டனை?

ஒரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு வெளியிலும், சுடுகாடுகளுக்கு அருகிலும் தான் விற்பனை செய்யப்படும். அங்கு மது அருந்துவதற்காக செல்பவர்கள், யார் கண்களிலும் படாமல் பதுங்கி, பதுங்கி தான் செல்வார்கள். அந்த நிலையை மாற்றி பள்ளிகளுக்கும் மக்கள் கூடும் இடங்களுக்கும் அருகில் மதுக்கடைகளை அமைத்து அவற்றுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யும் நிலையை உருவாக்கியது யார்? பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டதாக ஆட்சியாளர்கள் அறிவித்த பிறகும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குறைந்தது இரு மதுக்கடைகளையாவது கடந்து செல்ல வேண்டிய சூழல் இப்போதும் நிலவுவது யாருடைய தவறு?

ஒழிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவ்வளவு இருக்கும் போது, ஆன்லைனில் முன்பதிவு செய்து, வரிசையில் நிற்காமல் எளிதாக மது வாங்குவதற்கான இணையதளத்தை ஆட்சியாளர்கள் உருவாக்கியது தான் சீர்திருத்தமா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு எல்லாம் ஆட்சியாளர்கள் விடையளித்து தீர்வு காண வேண்டும். மனிதர்களை ஒழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும். எனவே, மக்களுக்கும், மாணவர்களுக்கு மது எளிதாகக் கிடைப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். குறைந்தது ஆண்டுக்கு 1000 மதுக்கடைகளை மூடி, அடுத்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த முதலமைச்சர் விஜய் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..’’ என்று கேட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link