News

Follow Us

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 

தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவக் கோவில்களிலும் வருகிற 23ம் தேதி வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஒவ்வொரு கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

அதன்படி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து  நேற்று (டிச.18) நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சார வாரியம், சென்னை குடிநீர் வாரியம், தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி பேசினார்.

 

அதன் பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ‘‘வருகிற 23ம் தேதி கொண்டாடப்பட உள்ள வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீத அளவுக்கு கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார். இதன் காரணமாக பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காலை 6 மணி முதல் இரவு நடை மூடப்படுகின்ற வரைக்கும் பொது தரிசனம் கடைபிடிப்பதோடு, சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுவாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

 

கிழக்கு கோபுர வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுர வாசல் வழியாக சொர்க்க வாசல் சேவைக்கு வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் டி.பி.கோவில் வழியாக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வரிசையில் 70 வயது நிரம்பிய முதியவர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link