Share via:
திருப்பதி பிரம்மோற்சவம் நேற்று (செப்.18ம் தேதி) தொடங்கிய நிலையில் 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
திருமலை திருப்பதியில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் படைக்கும் கடவுளான பிரம்மதேவனை அழைத்து உலகநன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த உத்தரவிட்டதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்ற பிரம்ம தேவன், புரட்டாசி மாதத்தில் திருவோணநட்சத்திரம் அன்று நிறைவு பெறும் வகையில் தொடர்ந்து 9 நாட்கள் உற்சவத்தை நடத்தியதால் இதற்கு பிரம்மோற்சவம் என்று பெயர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்படி ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் பிரமாண்டமாக நடத்தி வருகிறது. நவராத்திரி நடைபெறும் சமயங்களில் இந்த பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, திருவோண நட்சத்திர தினத்தன்று நிறைவு பெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று (செப்.18) அன்று தொடங்கிய பிரம்மோற்சவ விழா வருகிற 26ம் தேதி வரையிலும், அக்டோபர் 15ம் தேதி முதல் 23ம் தேதிவரையிலும் அஷ்டதளபாத பத்மராதனம், திருப்பாவாடை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, சஹாஸ்ரதீப அலங்கார சேவைகள் பக்தர்களின் நலனுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன.
வருடாந்திர பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வுகளான நேற்றைய கொடியேற்றத்தை தொடர்ந்து வருகிற 22ம் தேதி கருட சேவையும், 23ம் தேதி தங்கத் தேரும், 25ம் தேதி திருத்தேரும், 26ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறும். அதைத்தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற உள்ளன.

