Share via:
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தற்போது திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் களை கட்டியுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி பிரம்மோற்சவம் வருகிற 18ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ காலங்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வருகிற 22ம் தேதி இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவையின் போது வழக்கத்திற்கு அதிகமாக ஒன்று ஒருநாள் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான கோவிலை சுற்றி அலங்காரப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்டு தோறும் திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து 2 மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.
முதலில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று 250 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் எடுத்துச் செல்லப்படும் ஏழுமலையான் கருடசேவைக்கான, வெண்பட்டு திருக்குடைகள்.
பிரம்மோற்சவ கருடசேவையின்போது ஏழுமலையானுக்கு 250 ஆண்டு காலமாக திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட்டு வந்த நிலையில் 1990க்கு பிறகு சில ஆண்டுகள் தடைபட்டது.
அதன் பின்னர் பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து, கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்து தர்மார்த்த சமிதி ஏற்று நடத்தி வருகிறது.
அதன்படி நேற்று திருக்குடை உற்சவ ஊர்வலம் ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் 19வது ஆண்டாக நேற்று தொடங்கியது.
சென்னை பூக்கடையில் அமைந்துள்ள சென்னகேசவ பெருமாள் கோயிலில் வைத்து 11 வெண்பட்டு குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து குடைகள் கோயில் வளாகத்தில் உலா வந்தது.
இந்த தொடக்க நிகழ்ச்சியில் இந்து தர்மார்த்த ஸமிதியின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் தலைமை வகித்த நிலையில், அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி அனைவரையும் வரவேற்றார்.
மேலும் ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் மவுனகுரு தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை கமலக்கண்ணியம்மன் திருக்கோயில் தவத்திரு சச்சிதானந்தா ஸ்வாமிகள் ஆகியோர் திருக்குடை தொடக்க விழா கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி அதன் பின்னர் திருக்குடை ஊர்வலத்தை இனிதே தொடங்கி வைத்தனர்.
உலகப்பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வண்ண மலர்களை தூவி பக்திபரவசத்துடன் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று கோஷமிட்டு திருக்குடையை வழிபட்டனர்.

