News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பெரியார் அறிவுலக மோசடி விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியின் விமர்சனம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில், தாமரை பிரதர்ஸ் மீடியா சார்பில் வெளியிட்ட, ‘மகா பெரியவா’ புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார். அப்போது அவர், ‘’கடந்த இரண்டு நாட்களாக அடைந்த வேதனையை வெளியில் சொல்ல முடியாது. 2024ல் நீதிபதி மகாதேவனுடன் இணைந்து தீர்ப்பு ஒன்றை வழங்கினேன். நுாலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாக 2019ல் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அவ்வழக்கின் விசாரணை 2024ல் வந்தது. அப்போது புத்தக கொள்முதலில் இனி மோசடி நடக்காமல் இருக்க பல்வேறு வழிகாட்டுதல்களை தீர்ப்பில் வழங்கியிருந்தேன்.

தற்போது கோவை ஈ.வெ.ரா., அறிவுலகம் நுாலகத்தில் மீண்டும் முறைகேடு நடந்திருக்கிறது என்றால், எனக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும். அந்த அறிவுலகத்தில் உள்ள அனைத்து ரேக்குகளிலும் அகல்விளக்கு புத்தகங்கள் தான் இருக்கிறது. அந்த பாவம் கழிய, மஹா பெரியவருடைய புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும்’’ என்று பேசியிருந்தார்.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி., வெங்கடேசன், ‘புத்தக கொள்முதலில் நடந்திருப்பது ஊழல். அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அது தான் நீதிபதிகளின் வேலை. நடந்திருப்பது பாவம்; அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்வது ஜோதிடர்களின் வேலை’ என, கிண்டலாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், புத்தக கொள்முதல் முறைகேடு வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு நகைச்சுவை உணர்விற்காக அப்படி கூறினேன். அதற்கு மதுரை எம்.பி., வெங்கடேசன், என் பணிகளை எப்படி செய்ய வேண்டும் என அறிவுறுத்துவது போல பதிவிட்டிருக்கிறார்.

ஆறு மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தேன். ரயில் ஏறுவதற்கு முன், உயர் ரக பென்ஸ் காரில் ஒருவர், ‘பிராண்டட்’ ஆடை, காலணி அணிந்து வந்திறங்கினார். நான், ‘கார்ப்பரேட் நபராக இருக்கும்’ என, முதலில் நினைத்தேன். அருகில் வந்த பின் தான், ‘வெங்கடேசன் சார்… நீங்களா?’ என்றேன். அவர், முதல் வகுப்பு ‘ஏசி’ பெட்டியில் ஏற முயன்றார். நான் வேறொருபுறம் செல்வதை பார்த்து, ‘நீதிபதி சார் எங்கு செல்கிறீர்கள்?’ என, கேட்டார். அதற்கு, ‘நான் ஸ்லீப்பர் வகுப்பில் தான் வழக்கமாக பயணிப்பேன். என் இருக்கை எண், எஸ் 3 – 23’ என்றேன்.

ஒரு நீதிபதியாக, நான் எப்படி பணியாற்ற வேண்டும் என, அவர் எனக்கு அறிவுறுத்துகிறார். அவர், தன்னை ஒரு கம்யூனிஸ்ட் தலைவனாக கூறிக் கொள்கிறார். ஆனால், பென்ஸ் கார், பிராண்டட் ஆடைகளை அணிகிறார். புத்தகங்கள் எழுதுவதன் மூலம் கிடைக்கும் ராயல்டி தொகையை வைத்து இத்தகைய வாழ்க்கை முறையை தொடர்ந்து நடத்த முடியுமா என, எனக்கு தெரியவில்லை. எதற்காக இதை கூறுகிறேன் என்றால், இதுபோன்ற முறைகேடு சம்பவங்கள் கவனத்தையும், ஆற்றலையும் திசை திருப்புகிறது’’ என்று நீதிபதி கூறினார்.

இதற்கு சு.வெங்கடேசன், ‘’ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் அளவிலாத பெருமை கொள்கிறேன். கம்யூனிசம் எனக்குக் கேள்வி கேட்கக் கற்றுத் தந்தது. அந்தக் கேள்வி அதற்குரிய எதிர்வினையை உருவாக்கும்போது கேள்வியின் நியாயம் உறுதிபடுத்தப்படுகிறது. இந்தப் பாடத்தை எந்த அவதூறும் அழித்துவிட முடியாது. நான் இரயில்நிலையம் வந்திறங்கிய கார் கொண்டு விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். இத்தகைய விமர்சனங்கள் உண்மைகளைச் சரிபார்க்காமல், மேலோட்டமான அவதானிப்பின் அடிப்படையில் முன்வைக்கப்படும்போது, அவை ஒரு சார்புநிலையை வெளிப்படுத்துவதுடன், தனிநபர் தாக்குதலாகவும் மாறுகின்றன. அது மலிவான தனிநபர் தாக்குதல்.

அது என் காரும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்தக் கார் ஏதுமில்லை. நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமை சார்ந்ததே என் ரயில் பயணம். முதல் வகுப்பில் பயணிப்பதால் ஒருவரின் கருத்து தவறாகிவிடாது; ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதால் ஒருவர் சொல்வது சரியாகிவிடாது.

இது போன்ற ஒப்பீட்டை அறிவார்ந்த சமூகம் எடைபோட மறக்காது. எந்த ஒரு மனிதர் மீதான சமூகத்தின் நன்மதிப்பும் அவரது கருத்துகளாலும் செயல்களாலும் உருவாகிறது. நாங்கள் அணியும் சட்டைக்காகவும், வந்திறங்கும் காருக்காகவும், பயணிக்கும் வகுப்புக்காகவும் இன்னும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறோம். இக்கேள்வி “தூய்மை மற்றும் எளிமை” எனும் எங்களின் கோட்பாடு சார்ந்து முன்வைக்கும் போது அதற்கு பொறுப்போடு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அப்படியொரு பெருமைமிகு கட்சியால்தான் நாங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆனால், ஆடை பரிசோதகரின் தத்துவம் மற்றும் அரசியல் என்ன என்பது எல்லாவற்றையும் விட முக்கியம். பாவபுண்ணியத்திற்கும் பகுத்தறிவுக்குமான போராட்டத்தில் நாங்கள் நிற்கும் தரப்புக்காக பெருமையோடு என்றும் முன்நிற்போம். ஏனெனில் இந்தப் போராட்டம் எங்களோடு தொடங்கியதும் இல்லை; எங்களோடு முடியப்போவதும் இல்லை…’’ என்று நெத்தியடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத்தினர், ‘’பெரியார் அறிவுலகத்தில் நடந்த புத்தக மோசடி ‘பாவங்களை’ தீர்க்க உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு யோசனையை ‘அருள்வாக்காக’ வழங்கியிருக்கிறார். ‘காஞ்சிப்பெரியவாள்’ நூல்களை பெரியார் அறிவுலகத்தில் அடுக்கி வைத்தால் இந்தப் பாவங்கள் பறந்தே போகும் என்பதுதான் இந்த ஆலோசனை. ‘பெரியவா’ புத்தகங்களை இப்படி அடுக்கி வைத்தால், ‘‘தீண்டாமை பாவம், ஸ்திரி பாவம், ஸ்நான பாவம், ஆகார பாவம், சமுத்திர பாவம்” உள்ளிட்ட அனைத்து ‘பாவங்களும்’ நூலகத்தை தொற்றிக் கொள்ளும் என்பதால் அது வேண்டாம்; *‘மைலார்ட்’* . அந்த நூல்கள் உங்கள் சட்ட அலமாரியில் அப்படியே இருப்பதே ஷேமஹரமானது.’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link