Share via:
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தமன்னா, குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் பார்வையிட்டு மெய்சிலிர்த்து போன சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. இருப்பினும் மழைக்கால கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் அலுவல்கள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும் அடுத்தடுத்த நாள் சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெற்று வருகின்றன.
இந்த சிறப்புக்கூட்டத்தொடரில் முத்தாய்ப்பாக மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக முழு ஆதரவுடன் நிறைவேறியது. அதன் எதிரொலியாக பிரம்மகுமாரிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் கங்கனா ரனாவத், ஈஷாகுப்தா, பாடகிகள் சப்னா சவுத்ரி, சுமித்ரா குஹா, ஆடை வடிவமைப்பாளர் ரினா டாக்கா உள்ளிட்ட பெண் பிரமுகர்கள் நாடாளுமன்ற இரு அவைகளையும் சுற்றிப் பார்த்து வியந்தனர்.
அதேபோல் நேற்று முன்தினம் பாலிவுட் நடிகைகளான பூமிபெட்னேக்ர, ஷெஹ்லான் கில், டோலிசிங், ஷிபானி பேடி ஆகியோரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்டனர்.
இவர்களை தொடர்ந்து நேற்று நடிகைகளான தமன்னா பாட்டியா, குஷ்பு மற்றும் திவ்யா தத்தா ஆகியோர் பார்வையிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் தங்களது எக்ஸ் பக்கத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வைரலாக்கி வருகிறார்கள்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் முதலாக தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட மசோதா மகளிர் 33% இட ஒதுக்கீடு என்று முன்வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகைகளுக்கு சிறப்பு அழைக்கப்பட்ட நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புறக்கணிக்கப்பட்ட சம்பவமும் இன்றளவும் பேச்சுப் பொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.