News

Follow Us

கூட்டணித் தலைவர்கள் கட்டிபிடிப்பதும் கையை உயர்த்துவதும் சகஜமாக நடப்பது தான். ஆனால், கோவையில் ராகுல் செய்த காரியம் தமிழகம் முழுவதும் வைரலாக மாறியிருக்கிறது.

கோவை செட்டிபாளையத்தில் இண்டியா கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி (கரூர்) ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசுவதற்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த ராகுல் காந்தி வழியில் கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் ஓர் இனிப்பகத்தைப் பார்த்ததும் காரை நிறுத்தினார். கடை அவர் சென்ற சாலையின் எதிர்புறத்தில் இருந்ததால் ராகுல் காந்தி சாலைத் தடுப்பைத் தாண்டிச் சென்று கடையில் இனிப்புகளை காசு கொடுத்து வாங்கிக் கொண்டு அதற்கான சில்லறையையும் பெற்றுக் கொண்டார்.

ஊழியர் ஒருவர் வழங்கிய இனிப்பை ருசித்ததோடு கடையில் இருந்த பெண் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் பிரச்சாரத் திடலுக்கு ராகுல் வந்தபோது அவரை முதல்வர் ஸ்டாலின் அரவணைத்து வரவேற்றார். அப்போது அவரிடம் ராகுல் காந்தி இனிப்புகளைக் கொடுத்தார்.

இதனை நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட ஸ்டாலின், ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்! எனது சகோதரரின் இனிய செயலால் நான் பரவசமடைந்தேன். ஜூன் 4 ஆம் தேதி இந்தியா அவருக்கு இனிப்பான வெற்றியைத் தரும்” என்று பதிவிட்டுள்ளார். அது இந்திய மக்கள் மற்றும் இண்டியா கூட்டணி எனப் பொருள்படும் வகையில் அமைந்துள்ளது.

கூட்டத்தில் இருவரும் கட்டிப்பிடித்ததும் ஒருவரையொருவர் அக்கறையுடன் பார்த்துக்கொண்டதும் பெரும் வைரலாகியுள்ளது. இத்தனை நாட்கள் மோடியின் ரோடு ஷோவை ஒரே ஒரு ஸ்வீட் மூலம் காலி செய்துவிட்டார் ராகுல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link