Share via:
ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து திரைப்படங்களில் இசையமைத்து வந்தாலும், தனது ரசிகர்களுக்காக அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதன் மூலம் வரும் பணத்தையும் பல்வேறு நற்காரியங்களுக்காக செலவிட்டு வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை உருவாக்கியுள்ளது.
அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, தொடர் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் அதற்காக வாங்கிய டிக்கெட்டுகளை அடுத்த நிகழ்ச்சியின் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதைத்தொடர்ந்து மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்.10) சென்னை ஈசிஆரில் உள்ள பனையூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த இசைக்கச்சேரியை ஆர்ச்சிட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனமும் ஏசிடிசி ஈவென்ஸ்ட் என்ற நிறுவனமும் ஒருங்கிணைந்து நடத்தி முடித்தனர்.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளுடன் குவிந்த ரசிகர்களிடம் கார் பார்க்கிங், பைக் பார்க்கிங்கிற்காக குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டதால் வேதனையடைந்தனர். மேலும் புதிதாக டிக்கெட் வாங்கியவர்கள், ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் நுழைவு வாயிலில் நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
25 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே வருவார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரசிகர்கள் வரை ஒரே இடத்தில் குவியத் தொடங்கினர். இதனால் ஈசிஆர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய் நின்றது.
அந்த நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினினும் இந்த போக்குவரத்து நெரிசலில் சுமார் ஒன்றரை மணிநேரம் சிக்கியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தந்தையான மு.கருணாநிதியின் உதவியாளரான சண்முகநாதனின் பேத்தியின் திருமணம் வடநெமிலியில் நடைபெற்றது. அதேபோல மற்றொரு தி.மு.க. நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அதன் பின்னர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பிக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், ஏ.ஆர்.ரகுமான் இசைக்கச்சேரியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளார்.
கோவளம் முதல் அக்கரைவரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. இதில் அப்சட் ஆன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்.11) சென்னை தலைமைச் செயலகத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே அலுவல்களை கவனித்தார். மேலும் கலைஞர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் இருந்தபடியே மக்களிடையே உரை நிகழ்த்தியதாக நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த குளறுபடிகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜூக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த விசாரணையின் முடிவில் சென்னை பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன், தென் சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் ஐபிஎஸ் அதிகாரி தீஷா மிட்டல் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு கருதி முதலமைச்சர் பயணிக்கும் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில்,ஏ.ஆர்.ரகுமாரனின் இசைக்கச்சேரியால் பாதுகாப்பற்ற மற்றும் அமைதியற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது பெரும் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.