News

Follow Us

மூன்றாவது முறையாக 400 தொகுதிகளில் ஜெயித்து ஆட்சிக்கு வருவோம் என்று தேர்தலில் குதித்த பா.ஜ.க. இப்போது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு ஒரு பிரதமராக இருப்பார்கள் என்று கூறும் அளவுக்கு அரசியல் நிலைமை மாற்றம் அடைந்துள்ளது.

பிஹார் மாநிலம் ஜன்ஜார்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசுகையில், ’’கடந்த 10 ஆண்டுகளாக நிலையான ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தந்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிக் கூட்டணியான இண்டியா கூட்டணியில் அந்த நிலைமை இல்லை. அவர்கள் பதவி மோகத்துக்காக அலைகின்றனர்.

இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமராக இருப்பார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். அதன் பின்னர் வாய்ப்பிருந்தால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் பதவியை வகிப்பார்.

இண்டியா கூட்டணி சொல்வதைப் போல ஒரு நாட்டை இப்படியெல்லாம் நடத்த முடியாது. 30 ஆண்டுகளாக நிலையற்ற ஆட்சி நடைபெற்றதால், நாடு அதற்கான விலையை கொடுத்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் வலிமையான தலைமை கிடைத்திருப்பதன் மூலம் கொள்கை, வளர்ச்சி திட்டம் ஆகியவற்றிலும் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது.

அயல்நாடுகளில் இந்தியாவின் அதிகாரம், வலிமையைப் பாராட்டுகின்றனர். இந்த முறையும் நாட்டு மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம்…’’ என்று கூறியிருக்கிறார்.

பா.ஜ.க. ஆட்சியமைப்பது சிரமம் என்று தெரிந்தபின்னரே, வலிமையான பிரதமர் என்ற கோஷத்தை எழுப்புவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link