News

Follow Us

பேசுறது எல்லாம் நல்லாத்தான் இருக்கும், ஆனா செய்யுறது அத்தனையும் தில்லுமுல்லு என்பார்கள். அப்படித்தான் இருக்கிறது தி.மு.க.வின் நாத்திக கொள்கை செயல்பாடுகள். பா.ஜ.க.வின் ஆன்மிக அரசியலை தோலுரிப்பதாக சொல்லிக்கொண்டு, அதே பாதையில் தி.மு.க.வும் பயணிப்பதுதான் காமெடி அரசியல்.

 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிள்ளையார் கோயில் கட்டி வழிபாடு தொடங்கப்பட்டிருப்பதற்கு திராவிடர் கழகம் சார்பில் தி.மு.க. அரசுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனை தி.மு.க. அரசு கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், தி.மு.க. அமைச்சர் சேகர்பாபு, ‘முருகனின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திட சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, இந்த ஆறு திருக்கோயில்களுக்கும் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பேரை ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட அறநிலையத்துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, முதற்கட்ட அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் வரும் 28ம் தேதி தொடங்க இருக்கின்றது. இதற்கான விண்ணப்பத்தை துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர். ஏனைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்து செல்ல முன்னுரிமை வழங்கப்படும்.

அறநிலையத்துறை சார்பில், ஏற்கனவே மானசரோவர், முக்திநாத் மற்றும் ராமேசுவரம் – காசி ஆன்மிக பயணங்கள் செயல்படுத்தப்பட்டு பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். ராமேசுவரம் – காசி ஆன்மிக பயணத்திற்கு இந்தாண்டு 300 பேர் அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு 75 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கியுள்ளது.

அறுபடை வீடு கோயில்களிலும் தைப்பூசத்திற்கு சிறப்பு கட்டண தரிசனத்தை ரத்து செய்வது தொடர்பாக கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்’ என்று கூறினார்.

அயோத்தியில் ராமர் பெயரை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சனம் செய்துவரும் தி.மு.க. அரசு தமிழகத்தில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடு தரிசனத்துக்கு இலவசமாக பக்தர்களை அழைத்துச்செல்வதாகச் சொல்லி இரட்டை வேடம் போடுகிறது என்று தி.மு.க.வினரே அதிர்ச்சியாகிறார்கள்.

பெரியாரின் கொள்கைகளை எல்லா இடங்களுக்கும் கொண்டுசேர்ப்போம் என்று சொல்லும் ஸ்டாலினின் பேச்சுக்கு உண்மையான அர்த்தம் இதுதானா என்று திராவிடர் கழகத்தினர் ஆவேசம் காட்டுகிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link