Share via:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால் அதர்வா ஆகிய 4 பேருக்கு ரெட் கார்டு விதிக்கப்படுகிறது.
சென்னையில் நேற்று (செப்.13) திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய 4 நடிகர்களுக்கும் ரெட் கார்டு விதிக்கப்படுகிறது. நடிகர் சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார்கள் அளித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் மைக்கேல் ராயப்பன் பிரச்சினையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக நடிகர் சிம்புக்கு ரெட் கார்டு விதிக்க முடிவு செய்யப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் இருந்த போது சங்கத்தின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் நடிகர் தனுஷ் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதால் அவருக்கு ரெட் கார்டு விதிக்கப்படுகிறது.
அதேபோல் தயாரிப்பாளர் மதியழகன் விவகாரத்தில் நடிகர் அதர்வா தகுந்த பதில் அளிக்காமல் காலம் தாழ்த்துவதால் அதர்வாவுக்கு ரெட் கார்டு வழங்கப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
4 நடிகர்களின் ரெட் கார்டு விவகாரத்தால் தற்போது நடந்து வரும் படப்பிடிப்பும், வெளிவர உள்ள திரைப்படங்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

