News

Follow Us

கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை நாங்கள் தாக்கவில்லை என்று காவல் துறை கூறிய நிலையில், மதுரை நீதிமன்றத்துக்கு அவர் ஆஜராக வந்த நேரத்தில் கையில் கட்டு போட்டிருந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இவரை கோவை போலீஸார் மே 5ம் தேதி கைது செய்தனர். தேனியில் சவுக்கு சங்கர் காரில் சோதனையிட்ட பழனிசெட்டிபட்டி போலீஸார் காரில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சங்கருடன் தேனி விடுதியில் தங்கியிருந்த ராஜரத்தினம், அவரது ஓட்டுனர் ராம்பிரபு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரையும் பழனிசெட்டிபட்டி போலீஸார் கைது செய்தனர். கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை போலீஸார் மதுரை போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு இன்று ஆஜர்படுத்தினர்.

அப்போது சங்கர் வலது கையில் கட்டுப்போட்டிருந்தார். அவரிடம் நீதிபதி வழக்கு குறித்து என்ன சொல்கிறீர்கள்? என கேள்வி கேட்டார். அதற்கு சங்கர், “இது பொய் வழக்கு. கோவை சிறையில் என்னை போலீஸார் கடுமையாக தாக்கினர். இதில் எனக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கோவை சிறையில்  எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் என்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கோரிக்கை தொடர்பாக மனு அளித்தால் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும், எனக் கூறி, சங்கரை மே 22 வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதுகுறித்து காவல் துறை வட்டாரம், ‘’நாங்கள் சவுக்கு சங்கரை தாக்கவே இல்லை. கோவைக்கு வரும் வழியில் விபத்து நடந்த நேரத்தில் அவருக்கு கையில் முன்பு பிளேட் மாட்டப்பட்ட இடத்தில் வலி இருப்பதாகக் கூறியதால் கையில் கட்டு போட்டிருக்கிறார்’’ என்கிறார்கள்.

இந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு எதிராக போராட்டம் நடத்த துடைப்பத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மதுரை நீதிமன்ற பிரதான வாயிலில் கூடி போராட்டம் நடத்தினார்கள். அந்த பெண்களிடம் எதற்காக கூடியிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ‘வரச்சொன்னாங்க வந்தோம்’ என்ற ரீதியில் பதில் கூறியிருக்கிறார்கள்.

ஆக, இது கூட்டி வந்த கூட்டம் என்பது உறுதியாகிறது. சவுக்கு சங்கர் மீது கடுமையான அழுத்தம் விழுந்திருப்பதால் இப்போதைக்கு அவரால் வெளியே வரவே முடியாது என்பதே உண்மை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link