Share via:
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அதன்படி பிரம்மோற்சவத்தில் நான்காவது நாளான இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் கற்பக விருட்ச வாகன புறப்பாடு நடைபெற்றது. கோவில் மாட வீதிகளில் உலா வந்த சுவாமிகளை திரளான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து தங்க கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு சர்வ திருவாபரண சமர்ப்பணம், தீப தூப நை வைத்திய சமர்ப்பணங்கள் நடத்தப்பட்டன.
தங்க கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமிகள் புறப்பட்ட நிலையில், யானைகள், குதிரைகள், காளைகள் அணிவகுக்க, திவ்ய பிரபந்த கானத்தை கோவில் ஜீயர்கள் பாடியபடி வழி நடத்தினர்.
விண்ணைத் தாண்டி ஒலித்த பக்தர்களின் கோஷத்திற்கு இடையே, ஏழுமலையானின் கற்பக விருட்ச வாகன புறப்பாடு கோவில் மாட விதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. அங்கு காத்திருந்த திரளான பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து வழிபாடு நடத்தி பக்தி பரவசமடைந்தனர்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் திருமலை திருப்பதி விழாக்கோலம் பூண்டு பக்தர்களின் வெள்ளத்தில் நிரம்பி வழிகிறது.