Share via:
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை கடந்த மாதம் ஆகஸ்டு 12ம் தேதி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்தது.
அதன் பின்னர் இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் செந்தில்பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சிறப்பு கோர்ட்டு விசாரிப்பதா? அல்லது மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு விசாரிப்பதா என்ற சட்ட சிக்கல்கள் எழுந்தன.
இதையடுத்து இதற்கான சரியான விளக்கம் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக ஜாமீன் மனுவுடன் சேர்த்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கையும் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு மட்டுமே விசாரணை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முறையிட்டார். இம்மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி, செந்தில்பாலாஜியை ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று கூறி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொட்ரந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அமைச்சர் செந்தில்பாலாஜி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று முறையிட்ட மனுவை, நீதிபதி அல்லி அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, இந்த ஜாமின் மனு மீது தங்கள் தரப்பு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி, வருகிற வெள்ளிக்கிழமைக்குள் (செப்.15) பதிலளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தார்.