Share via:
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக சன்மார் குழும நிறுவனத்தின் தலைவர் விஜய்சங்கர் ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளர்.
சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பெரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து பொதுமக்களை அவதிப்பட வைத்துள்ளது. இதனால் மக்கள் பாதுப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மிக்ஜாம் புயல் பேரிடர் மீட்புப்பணிக்காக பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றனர். அதன்படி சென்னை தலைமை செயலகத்திற்கு வந்த சன்மார் குழும நிறுவனத் தலைவர் விஜய்சங்கர், செயல் துணை தலைவர் கார்த்திக்ராஜசேகர் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினர்.
அதேபோல் லயன் டேட்டஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பொன்னுதுரை, இயக்குனர் அபிநயா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மிக்ஜாம் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்கள்.
சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர்களான துரைசாமி மற்றும் திருமதி சாந்தி துரைசாமி, ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தனர். அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினர். இந்த சந்திப்பின் போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உடன் இருந்தார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (டிச.11) தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, ம.தி.மு.க. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தொகையான ரூ.10 லட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரைவையாபுரி, எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், சின்னப்பா, சதன்திருமலைகுமார், ஏ.ஆர்.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்த நிலையில், பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம், மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம் மற்றும் பெரியார் கல்வி நிறுவனப் பணியாளர்கள் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். இந்த சந்திப்பின் போது கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் குமரேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதேபோல் தமிழ்நாடு இந்திய ஆட்சிப்பணி சங்கத்தின் தலைவர் குமார் ஜயந்த், துணைத் தலைவர் எம்.ஏ.சித்திக் உள்ளிட்டோர் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு, தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி சங்க உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கினார்கள்.
மேலும் தமிழ்நாடு இந்திய காவல்பணி அலுவலர் சங்கத்தின் தலைவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குனருமான அபாஷ்குமார், ஆயுதப்படை காவல்துறை தலைவரான ஜெயகெளி உள்ளிட்டோர், சென்னை தலைமை செயலகத்திற்கு சென்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர் இந்திய காவல் பணி அலுவலர் சங்கத்தின் சார்பில் 9 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.