Share via:
காவிரியில் போதுமான நீர் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி விவகாரம் எந்த தலைமுறையில்தான் விடிவுக்கு வரும் என்பது பொதுமக்களின் விடைதெரியாத கேள்வியாக உள்ளது. அந்தந்த காலகட்டங்களில் ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் காவிரி நீர் குறித்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து புதுடெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்து மனு அளித்து பேசினார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், டெல்லி சிறப்பு பிரதிநிதி கே.எஸ்.விஜயன், செல்வி எஸ்.ஜோதி மணி, முனைவர் தம்பிதுரை மற்றும் சந்திரசேகரன் (அ.தி.மு.க.) சுப்பராயன் (சி.பி.ஐ.) பி.ஆர்.நடராசன் (சி.பி.எம்.) வைகோ (ம.தி.மு.க.), தொல்திருமாளவன் எம்.பி., டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் (த.மா.கா), கே.நவாஸ் கனி (இயூமுலீ) ஏ.கே.பி.சின்னராஜ் (கொ.ம.தே.க) மற்றும் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் சென்றிருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய நீர் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கி கூறியுள்ளோம்.
போதுமான தண்ணீர் இருந்தும் கூட காவிரியில் இருந்து தண்ணீர் தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும் கர்நாடக அரசுக்கு தமிழகத்திற்கு _காவிரி நீர் தர துளியும் கூட எண்ணம் இல்லை’’ என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சரின் இந்த வெளிப்படையான பேச்சை தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்டு காவிரி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்து தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.