Share via:
ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்தில் கலந்து கொள்ள உள்ள தொழில் அதிபர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
சர்வதேச நாடுகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜி20 மாநாடு டெல்லியில் உள்ள பரகதி மெய்டன் இடத்தில் நாளை (9ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (10ம் தேதி) நடைபெறுகிறது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா உள்ளிட்ட 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாட்டின் மூலம் இந்திய நாட்டின் பெருமை சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் புதுடெல்லியில் நடைபெற உள்ள விருந்தினர்கள் யார், யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, பார்தி ஏர்டெல் நிறுவனர்-தலைவர் சுனில் மிட்டல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முகேஷ் அம்பானி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஆகியோர் உள்பட 500 தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பல்வேறு மாநில தலைவர்களும் விருந்தில் பங்கேற்க டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.
ஜி20 மாநாட்டை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க டெல்லியை சேர்ந்த 80 ஆயிரம் காவலர்கள் உட்பட மொத்தம் 1.30 லட்சம் பேரும், நீல நிற உடையில் 45 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.