Share via:
மத்திய பிரதேசத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சனாதன தர்மம் குறித்து உரை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் சனாதன தர்மம் குறித்து பல்வேறு கருத்துகளும், எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வலுத்து வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்த சனாதன தர்மம் குறித்த வாக்குவாதங்கள் இன்றளவும் பல்வேறு தரப்பினர் மத்தியில் பேச்சுப் பொருளாக மாறி வழக்குகளுக்கும் வழிவகுத்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு சனாதன தர்மம் குறித்து உரை நிகழ்த்தியுள்ளார்.
அவர் பேசும் போது, ‘‘சுவாமி விவேகானந்தர், லோகமான்ய திலகர் ஆகியோருக்கு உத்வேகம் அளித்த அந்த ‘சனாதன தர்மத்தை’ இந்திய கூட்டணியை சார்ந்தவர்கள் அழிக்க நினைக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
இன்று அவர்கள் வெளிப்படையாகவே சனாதனத்தை குறிவைக்க ஆரம்பித்துள்ளனர். நாளை அவர்கள் நம் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவார்கள் என்று பேசிய பிரதமர் மோடி, இந்திய நாட்டில் உள்ள அனைத்து ‘சனாதனிகளும்’ மற்றும் நம் நாட்டை நேசிக்கும் மக்களும் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் பிரதமர் மோடி, சனாதனத்தை குறித்து அவதூறாக பேசினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்று மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.