Share via:
டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பிரதமர் மோடி தனக்கு நன்றி தெரிவித்து காலில் விழுந்த பெண்களின் காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதன்படி டெல்லியில் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாராட்டு விழாவில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து, பூக்கள் தூவி பெண் நிர்வாகிகள் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து மகிழ்ந்தார்கள். அதேபோல் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசனும் பாராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி கால்களில் வானதி சீனிவாசன் ஆசிர்வாதம் பெற முயற்சித்த போது உடனே ஒரு அடி பின் பக்கமாக நகர்ந்த பிரதமர் மோடி, காலில் விழ வேண்டாம் என்பது போல் அறிவுரை கூறினார்.
இதைத்தொடர்ந்து வரிசையாக வந்த மகளிர் அணி நிர்வாகிகள் சிலரும் பிரதமர் மோடியின் கால்களில் விழுந்த போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பிரதமர் மோடியும் பதிலுக்கு மகளிர் அணி நிர்வாகிகள் காலை தொட்டு வணங்கி அதிர்ச்சியை கொடுத்தார். இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.