Share via:
ஜாமீன் கிடைக்காமல் செந்தில்பாலாஜி தவித்துவரும்
நிலையில் அடுத்து ஜெயிலுக்குப் போவதற்குத் தயாராகிறார் முன்னாள் அமைச்சர் நேரு. அதற்கு
வழிவகை செய்வது போன்று கே.என். நேருவின் நெருங்கிய உதவியாளர் கவி பிரசாத், வேலைக்கு
பணம் வாங்கிய ஊழல் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்ட அமலாக்கத்துறையின்
ஆவணத்தில், ‘கட்சி நிதி’ வசூலிப்பதில் கவி பிரசாத் முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிடப்பட்டது.
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் பல்வேறு
ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டபோது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த ஒப்பந்தங்களின்
மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருந்ததாகவும், ஒப்பந்ததாரர்களிடமிருந்து
சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
பணி நியமனங்களிலும் பணம் பெற்று நியமனங்கள்
செய்யப்பட்டதாக புகார்கள் வந்தன. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு,
அவரது சகோதரர்கள் மற்றும் பலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
அந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட கவி பிரசாத்தும் சேர்க்கப்பட்டிருந்தார்.
கவி பிரசாத் ரவிச்சந்திரனின் உதவியாளராகவும்,
முன்னாள் அமைச்சரின் நெருங்கிய தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்தவர். டெண்டர் விவரங்களை
முன்கூட்டியே அறிந்துகொண்டு, விரும்பிய ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும்
வகையில் செயல்பட்டதாகவும், ஒப்பந்தத் தொகையில் ஒரு பகுதியை கட்சி நிதி என்ற பெயரில்
வசூலித்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அவரது தொலைபேசி மற்றும் பிற ஆவணங்களில் இருந்து
கிடைத்த தகவல்கள் இந்த முறைகேடுகளை உறுதிப்படுத்துவதாக விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.
வழக்குப் பதிவான பிறகு கவி பிரசாத் தேடப்பட்டு
வந்தார். வெளிநாடு செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால்
தடுத்து நிறுத்தப்பட்டார். உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர்.
சாதாரண பியூனாக கே.என்.நேருவின் சகோதரர்
அலுவலகத்திற்குள் நுழைந்தவருக்கு இப்போது கோடிகளில் சொத்துக்கள் இருக்கின்றன என்பதில்
இருந்தே, அவரது கைவரிசையைப் புரிந்துகொள்ளலாம். இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில்
அடுத்து நேரு கைது செய்யப்படுவார் என்பது உறுதி.

