News

Follow Us

சதுரங்க வேட்டை படம் வெளியான பிறகு, மக்களை அத்தனை எளிதாக ஏமாற்ற முடியாது என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், ஆசையைத் தூண்டிக்கொண்டே இருந்தால் ஏமாற்றிகொண்டே இருக்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டி கோவையை கலக்கியிருக்கிறது மைவி3 ஆட்ஸ் நிறுவனம்.

திடீரென கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே புறவழிச் சாலையில் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்டனர். இவர்களில் பெரும்பாலோர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த சக்தி ஆனந்தன் என்பவர், கோவையை தலைமையிடமாக கொண்டு Myv3 Ads என்ற செயலியை நடத்தி வருகிறார். இந்த செயலி வாயிலாக ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்ட 90 பொருட்களை விற்பனை செய்து வருகிறார். அதோடு யூடியூப்பில் ஓடும் இந்த சேனலை தினமும் 2 மணிநேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும் புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் சேர்வதற்கு 360 ரூபாய் முதல் 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில்  பனம் செலுத்தலாம். செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும் சம்பாதிக்கும் தொகைக்கு ஏற்ப பொருட்கள் வழஙகப்பட்டுள்ளது. இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். அனைவருக்கும் மாதமாதம் பணம் வழங்கி வருவதாக கூறப்படுகிறது..

இந்த நிலையில், இது ஒரு சீட்டிங் நிறுவனம், பணம் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள் என்று பாமகவின் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து இந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது.

இதையடுத்து காவல் துறையின் விசாரணைக்கும் நிறுவனம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் இத்தனை மக்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக பேசியிருக்கும் சக்தி ஆனந்த், “பல லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வரும் நம் நிறுவனத்தை பற்றி கடந்த சில மாதங்களாகவும் கடந்த சில நாட்களாகவும் சமூக விரோதிகள் அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். இவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்” என வீடியோ வெளியிட்டு அனைவரையும் வரவழைத்ததாகக் கூறப்படுகிறது.

கூட்டம் அதிகரித்ததையடுத்து காவல் துறையினர் மற்றும் கோட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டம் குறித்து பேசிய போலீஸார்கள், ‘’மக்கள் யாரும் தன்னெழுச்சியாகக் கூடவில்லை. இந்த நிறுவனத்தில் செய்திருக்கும் முதலீடுக்கு மோசம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே வந்துள்ளனர்…இது ஒரு எம்.எல்.எம். கம்பெனி பாணியிலான மோசடி’’ என்கிறார்கள்.

இந்தியாவில் எம்.எல்.எம். நிறுவனங்களுக்கு தடை செய்யப்பட்டுவிட்டதால், ஆயுர்வேத பொருட்கள், நேப்கின், மளிகை பொருட்கள் கொடுப்பதாகச் சொல்லி சீட்டிங் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். விளம்பரம் பார்த்தால் பணம் என்பதும் மோசடி. இதுபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில நிறுவனங்கள் ஆட்களை இழுத்து பெரும் மோசடி செய்து தப்பி ஓடிவிட்டார்கள்.

இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள் தங்கள் சொந்த ரிஸ்கில் செய்கிறார்கள், யாரும் காவல் நிலையத்தில் புகார் செய்ய வரக்கூடாது என்று வெளிப்படையாக எச்சரிக்கை செய்தால் மட்டுமே மக்களிடம் மாற்றம் வர வாய்ப்பு உண்டு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link