News

Follow Us

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் ஓட்டுப் போடவேண்டும், அப்போது தான் ஜனநாயகம் வாழும் என்பது உண்மை. ஆனால், ஒட்டுமொத்தமாக தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும் காலத்தில் மக்கள் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை தேர்தல் நேரத்தில் காட்டியிருக்கிறார்கள். அதற்கு பரந்தூர் மற்றும் வேங்கைவயல் கிராமங்கள் உதாரணமாகியிருப்பதாக மருத்துவர் புகழேந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் விமானநிலையம் அமையவுள்ள பகுதி செழிப்பான விவசாய நிலங்கள் உள்ள பகுதி. 27% பரப்பு நீர்நிலைகள் உள்ள பகுதி. ஆக,அங்கு விமானநிலையம் அமையவிருப்பதை 13 கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர் மக்கள்,பஞ்சாயத்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து,தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதை துளியும் கண்டுகொள்ளாமல் தமிழக அரசு விமானநிலையம் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதால்,அப்பகுதி மக்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பணிதாக அறிவித்து,அதை செயல்படுத்தியும் உள்ளனர்.

ஏகனாபுரத்தில் உள்ள தகுதியான 1,375 வாக்காளர்களில் 21 பேர் மட்டுமே தங்களது வாக்குகளை பதிவுசெய்துள்ளனர். அவர்கள் அனைவரும் அரசுப் பணியாளர்கள். வாக்களிக்கவில்லையெனில்,அரசு அடக்குமுறைகளை அவர்கள் மீது ஏவக்கூடும் என்ற அச்சத்தில் அவர்கள் வாக்களித்தாகத் தெரிகிறது. மொத்தமுள்ள 52 அரசுப் பணியாளர்களில் 21 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகளின் தீர்மானத்தை துளியும் மதிக்காத அரசின் போக்கை,எதிர்த்து தங்களது உரிமையை நிலைநாட்ட, வாக்களிப்பை உள்ளூர் மக்கள் புறக்கணித்த நிலையில்,அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு துணைநிற்பது ஜனநாயகம் பேசுபவர்களின் கடமையாக இருக்க வேண்டுமல்லவா?

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்திலும்,2022 டிசம்பரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விசயத்தில்,இன்னமும் குற்றவாளிகளை கண்டுபிடித்து, அவர்களை காவல்துறை கைது செய்யாததைக் கண்டித்து, உள்ளூர் தாழ்த்தப்பட்டமக்களும், இறையூர் கிராமத்தை சேர்ந்த இந்து மக்களும் தேர்தலை புறக்கணித்துள்ளனர். மொத்தமுள்ள 561 வாக்குகளில்,62 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதில் தாழ்த்தப்பட்டவர்கள் வாக்கு – 53. 9 வாக்குகள் இந்துக்கள்(இறையூர் கிராமம்)இட்டுள்ளனர்.

15 மாதங்களுக்கு மேலாகியும்,இன்னமும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருக்கும் போக்கு எப்படி சரியாகும்? மாலை வரை 8 வாக்குகள் மட்டுமே அங்கு பதிவாகியிருந்தது.

பின்னர் மாவட்டஆட்சியர்,உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் முயற்சியால் 62 வாக்குகள் பதிவாகின என செய்தி வெளிவந்தாலும்,53 தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்களித்தது(60 தாழ்த்தப்பட்ட வாக்காளர்கள் அங்குள்ளனர்.),ஒருவேளை,அரசின்நலத்திட்டங்கள் வரும் காலங்களில் தங்களை அடைவதில் சிக்கல்/சிரமம் ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் பெருமளவு,பரந்தூர் விமானநிலையம்,வேங்கைவயல் சம்பவங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காத நிலையில், சாதாரண மக்களின் தேர்தல் புறக்கணிப்பு முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டும்.

இனியாவது ஸ்டாலின் மக்கள் பக்கம் நின்று பிரச்னையைத் தீர்க்க வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link