Share via:
சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம்
100 கோடி ரூபாய் ஏமாற்றியதாக பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்திருக்கும்
சம்பவம் திமுகவை திகிலில் ஆழ்த்தியிருக்கிறது.
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள்
சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன், சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை
அளித்திருந்தார். அதில் ‘‘சென்னை சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’
என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் பி.டி.அரசகுமார், தனக்குள்ள
அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்,
பள்ளித் தரம் உயர்வு, டிடிசிபி, சிம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப்
பெற்றுத்தருவதாகக் கூறினார்.
இதன்மூலம், தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து
பணம் பெற்றுக்கொண்டு, உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தை திரும்ப
தராமலும் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து ஏமாற்றியுள்ளார். எனவே
அரசகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்புகாரின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டு,
விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சாலிகிராமம்,
மெஜஸ்டிக் காலனியில் வசிக்கும் பி.டி.அரசகுமாரை நேற்று கைது செய்தனர்.
இது திமுகவை மிரட்டுவதற்கு நடந்த சம்பவம் என்று சொல்லப்படுகிறது.
விஜய் ஆட்சிக்கு வந்ததும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். எனவே, இது பழி வாங்கும்
நடவடிக்கை என்கிறார்கள்.
இதுகுறித்துப் பேசும் சமூக ஆர்வலர்கள், ‘’இந்த விவகாரத்தில், லஞ்சம்
கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகிகளையும் உள்ளே பிடித்து ஜாமீன் இல்லாதபடி விசாரித்து
அப்படியே சிறைக்கு அனுப்பினால் தான் தனியார் பள்ளி பேரால் நடக்கும் அராஜக ஊழலை ஊக்குவிக்கும்
செயல் முடிவுக்கு வரும்.
லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என எழுதி போர்டை
அலங்கரித்தது போதும். மின்சார துறையின் மீதான புகார்களை அனுப்பச்சொல்லி கேட்டது போல்
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளை விடாமல் நடவடிக்கை மேற்கொண்டு அனைத்தையும் ஒருபிடி பிடித்தால்தான்
சமச்சீர்கல்வி என்பது உண்மையாக அமையும்’’ என்கிறார்கள்.
இது மிரட்டலா அல்லது வழக்கமான நடவடிக்கையா என்பது தெரிந்துவிடும்.