Share via:
புதியதாக யாருக்கும் நிபா வைரஸ் தொற்று ஏற்படாததால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வந்தது. எனவே கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆத்தஞ்சேரி, மருதோங்கரை, குட்டியடி உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் வெளியே செல்வதையும், மற்றவர் உள்நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் அத்தியாவசியத் தேவைக்காக கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட இடங்களில் தளர்வுகளை அறிவித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் கீதா கூறும்போது, ‘‘கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள «பிரடர் மேலாண்மைத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளில் புதிதாக எந்த நிபா வைரஸ் பாதிப்பும் பதிவாகவில்லை.
இதனால் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மண்டலங்களில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் இரவு 8 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மேலும் நிபா ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு அனைத்து வங்கிகளும் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படும். மக்கள் ஒன்றுகூடுவது கடுமையாக கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், முகக்கவசம் அணிந்து சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.