News

Follow Us

காவல் துறை அதிகாரிகள் குறித்தும் பெண் அதிகாரிகள் குறித்தும் அவதூறு பேசியதாக பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.

சவுக்கு சங்கர் கைது தொடர்பாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சார்பு ஆய்வாளர் பாக்கியம் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது,

“வழக்கு விசாரணைக்காக கைது செய்ய வந்த கோவை போலீசாருடன் சம்பவ இடத்தில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த நான், சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் எனக் கூறியதற்கு, பெண் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசியதோடு கீழே தள்ளிவிட்டனர். 

மேலும் அவருடன் இருந்த இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ராம்பிரபு மற்றும் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம் ஆகிய இருவரும், தன்னை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்ததோடு மிரட்டல் விடுத்தனர்”

இதையடுத்து சவுக்கு சங்கரை மட்டும் கோவை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற பிறகு, அவர்கள் வந்த இன்னோவா காரில், தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக  கிடைத்த ரகசிய தகவலில், தேனி வட்டாட்சியர் ராணி முன்னிலையில் சோதனை செய்ததில், 409 கிராம் கஞ்சா மற்றும் 15,500 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

மேலும் அவர்கள் தங்கியிருந்த அறையில், நடத்திய சோதனையில், பணம் 54,130 ரூபாய் மற்றும் வங்கி ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டதால், இது தொடர்பாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம் பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகிய மூவர் மீது,IPC 294 (b), 353 மற்றும் TN Women Harrasment prohibition Act 4,  NDPS Act 8(C), 20(b)(II)(A), 29(1), 25 என அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் காலையில் இருந்து தற்போது வரை பழனி செட்டி பட்டி காவல் நிலையத்தில் சவுக்கு சங்கரின் உதவியாளர்கள் ராம் பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகிய இருவரிடம் தேனி மாவட்ட கூடுதல் துணைக் காவல் ஆணையாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சவுக்கு சங்கரின் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சவுக்கு சங்கர் கைது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்தது அவருக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link