Share via:
டம்மி பதவி கொடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனது
ஆதரவாளர்களுடன் எஸ்.பி. வேலுமணி அவசரக்கூட்டம் நடத்தியிருக்கிறார். இப்போது கட்சி மாறி
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால், அமைச்சர் பதவி தருவதாக விஜய் உறுதி அளித்துள்ளார்
என்று ஆதரவாளர்களிடம் பேசி ஆலோசனை கேட்டுள்ள தகவல் அதிமுகவினரை கொதிக்க வைத்துள்ளது.
கட்சியின் கொறாடா உத்தரவு மீறி
செயல்பட்டதாகக் கூறி, எஸ்பி
வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி
பழனிசாமி பறித்தார். அதன் பிறகு வேலுமணியின் அணியினர் மீண்டும் அதிமுகவில் இணைந்த போதிலும், அவர் முன்பு வகித்த கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும்
தலைமை நிலையச் செயலாளர் ஆகிய பதவிகள் அவருக்கு மீண்டும் வழங்கப்படவில்லை.
இதனால் கடுப்பாகியிருந்த வேலுமணி
நேற்று தொண்டாமுத்தூருக்கு உட்பட்ட புதுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண
மண்டபத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். இந்த
கூட்ட மேடையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படங்கள் மட்டுமே
வைக்கப்பட்டிருந்தன.
இந்த கூட்டத்தில் இப்போது
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டு வென்றால் அமைச்சர்
பதவி தருவதாக முதல்வர் விஜய் உறுதி தருகிறார். ஆனால், அதிமுகவை விட்டு வெளியேறுவதற்கு
விருப்பமில்லை. அதேநேரம், நமது ஆதரவாளர்களுக்குப் பழைய பதவி வழங்கப்படாவிட்டால், வேறு முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று பேசியிருக்கிறார்.
வேலுமணி என்ன முடிவு எடுத்தாலும்
ஆதரிப்பதாக அவரது ஆதரவாளர்கள் உறுதி அளித்துள்ளனர். இந்த நிலையில், ரகசியக் கூட்டம்
போட்ட வேலுமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்க வேண்டும்
என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
என்ன செய்யப்போகிறார் எடப்பாடி
பழனிசாமி..?