News

Follow Us

மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வினரே அதிருப்தி அடைந்திருக்கும் ஒரு வேட்பாளர் என்றால், அவர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மட்டும்தான். அப்பாவின் செல்வாக்கில் காய் நகர்த்தி சீட் வாங்கிவிட்டு மக்களை கண்டுகொள்ளவே செய்யாதவர். கடந்த தேர்தலில் இவரது வேலூர் தொகுதியில் எக்கச்சக்கமாக பணம் புரண்டோடியதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு தனியாக நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த தேர்தலிலும் அப்படியொரு சூழல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், மீண்டும் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் வீட்டில் பணம் கைப்பற்ற்ப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தில் நடராஜன் என்பவரது வீட்டில் தேர்தலுக்காக ரூ.3.50 கோடி பணம்பதுக்கி வைத்திருப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், குடியாத்தம் உட்கோட்ட டிஎஸ்பி ரவிச்சந்திரன், குடியாத்தம் உட்கோட்ட வருவாய்க் கோட்டாட்சியர் சுபலட்சுமி, கே.வி.குப்பம் சட்டப்பேரவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதி மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்றனர். அங்கு, வீட்டின் முன்பாக திரண்ட அதிகாரிகள் கதவைத் திறக்கும்படி கூறியும், நீண்டநேரம் வீட்டின் கதவைத் திறக்க நடராஜன் அவரது மனைவி விமலா ஆகியோர் மறுத்தனர்.

சுமார் ஒரு மணி நேரமாகியும் வீட்டின் கதவைத் திறக்காததால் பக்கத்து வீட்டின் வழியாக நடராஜன் வீட்டு மாடி பகுதிக்குக் காவல் துறையினர் சென்றனர். அங்கு, 500 ரூபாய் நோட்டு கட்டுகளாக 2 லட்சத்து 50 ஆயிரம்பணம் இருந்ததைப் பார்த்தனர். அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அக்கம்பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் உதவியுடன் நடராஜன் வீட்டின் மாடி படிக்கட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

வீட்டினுள் சோதனை மேற்கொண்டதில், ரூ.5 லட்சம் சிக்கியது. இந்தப் பணம் தாங்கள் சேமித்து வைத்தது என்று அதிகாரிகளிடம் கணவன் – மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.7 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தச் சோதனை நள்ளிரவு 1.30 மணியளவில் முடிந்தது.ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நடராஜன், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் தூரத்துஉறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாகக் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக நடராஜன் வீட்டில் பணம்பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சோதனை மேற்கொண்டதில் ரூ.7 லட்சம் கிடைத்தது நடராஜன் வட்டிக்குப் பணம் கொடுப்பதும், மாதாந்திரச் சீட்டுநடத்தி வந்துள்ளதும் முதற்கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு அவர் உரிய கணக்குக் காட்டினால் அந்தப் பணம் அவருக்குவழங்கப்படும். வருவாய்த் துறையினர் உதவியுடன் அந்தப் பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

அதேநேரம், துரைமுருகன் தரப்பில், இது தேர்தல் பழி வாங்கும் நடவடிக்கை என்று கூறப்படுகிறது. எப்படியோ தமிழகத்தில் தேர்தல் கண்ணாமூச்சு சூடு பிடிக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link