News

Follow Us

திருமண ஆசை காட்டி நூதன முறையில் கே.கே.நகர் இளம் பெண்ணிடம் 2.87 கோடி ரூபாய் சீட்டிங் செய்த நைஜீரியர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீர் ராய் ரத்தோர் தலைமையிலான டீம் கைது செய்து சாதனை படைத்திருக்கிறது.  

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மேட்ரிமோனியல் இணையதளத்தில் திருமணத்திற்காகப் பதிவு செய்திருக்கிறார். அவரை வெளிநாட்டில் இருந்து தொடர்புகொண்ட அலெக்சாண்டர் சான்சீவ் என்பவர், திருமணம் செய்துகொள்ள விருப்பம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இருவரும் தொடர்ந்து வாட்ஸ் ஆப் மூலம் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

இளம்பெண்ணை கவர்வதற்காக அவ்வப்போது விலை மதிப்புமிக்க பொருட்களை அலெக்சாண்டர் முதலில் அனுப்பி வைத்திருக்கிறார். இதை பார்த்த இளம் பெண் ரொம்பவே மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். இந்த நேரத்தில் மனுதாரருக்கு விலை மதிப்பு மிக்க பரிசுப் பொருள் ஒன்று புதுடெல்லி விமான நிலையத்திற்கு வந்திருக்கிறது என்றும் சுங்க வரி கட்டினால் மட்டுமே அதனை எடுத்துக்கொள்ள முடியும் என்று கஸ்டம்ஸ் அதிகாரி போன்று பேசியிருக்கிறார்கள்.

விலை மதிப்புமிக்க பொருள் என்பதால் அதை எப்படியும் எடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் 2 கோடியே 87 லட்சம் ரூபாய் அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு தொடர்பு எல்லைக்கு அலெக்சாண்டர் வரவே இல்லை என்றதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குகள் மற்றும் செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டன. டெல்லி, மேகலயா, கேரளா, குஜராத், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் போலியான முகவரி காட்டி வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளன. இந்த வங்கிக் கணக்குகளின் ஏடிஎம் பரிமாற்றம் மற்றும் நெட் பேங்கிங் ஆகியவை புதுடெல்லியின் உத்தம்நகர், மோகன் நகர் மற்றும் துவார்கா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை டெல்லிக்கு விரைந்து மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த அகஸ்டின் மதுபுஷி மற்ரும் செய்னெடு ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 7 செல்போன்கள், 3 லேப்டாப்கள் மற்றும் 40 டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று சென்னை எழும்பூர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேட்ரிமோனி இணையதளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளவர்களை குறிவைத்து, திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்து ஏமாற்றி மோசடியில் ஈடுபடுகிறார்கள். பரிசுகளை பார்சல் அனுப்பியதாகச் சொல்லி ஏமாற்றியும், சுங்க அதிகாரிகள் போல் பேசியும் ஏமாற்றி பணம் வசூல் செய்கிறார்கள். அபராதக் கட்டணம் உடனே செலுத்தவில்லை என்றால் கைது செய்ய நேரிடும் என்று அச்சமூட்டி பணம் செலுத்த வைக்கிறார்கள்.

ஆகவே மேட்ரிமோனி இணையதளத்தில் பரிசு மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக சந்தேகம் இருக்குமாயின் 1930 என்ற எண்ணுக்கு அல்லது இணையதளம் வாயிலாக புகார் அனுக்குமாறு பொதுமக்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உஷாரா இருங்க மக்களே.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link