News

Follow Us

மதுரை தொகுதியில் சிட்டிங்  எம்.பி.யான மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  சு.வெங்கடேசனே களத்தில் இருக்கிறார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் புதிதாக கட்சியில் இணைந்த டாக்டர் சரவணனும் பா.ஜ.க.வில் ராம சீனிவாசனும் களத்தில் நிற்கிறார்கள்.  

துரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை தெற்கு மற்றும் மேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய மதுரை நாடாளுமன்றத்தில் மதுரை மேற்கில் செல்லூர் ராஜூவும் மேலூரில் செல்வமும் மட்டுமே அ.தி.மு.க. மற்ற அனைத்தும் தி.மு.க.வினர் கையில் உள்ளது. 

இந்த தொகுதியில் முக்குலத்தோர், யாதவர்கள், நாயக்கர், சவுராஷ்ட்ரா சமூக வாக்குகள் கணிசமாக உள்ளன.

இந்த தொகுதியில் காலம் காலமாக குண்டும் குழியுமான சாலைகள், தண்ணீர் பிரச்னை, கட்டப்படாத எய்ம்ஸ், ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இல்லை என்பதால் வேலையில்லா திண்டாட்டம் போன்றவை இருந்தாலும், யாரும் அதற்காக வருத்தப்படுவதாக தெரியவில்லை.

கடந்த 2019 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் நின்ற சு.வெங்கடேசன் 4.47 லட்சம் வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் 3.07 லட்சம் வாக்குகளும் பெற்றனர். மக்கள் நீதி மய்யத்தின் அழகர் 85 ஆயிரம் வாக்குகளும் நாம் தமிழர் பாண்டியம்மாள் 42 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர்.

அ.தி.மு.க.வில் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனுக்கு வாய்ப்பளிக்க தலைமை விரும்பினாலும், அவர் நிற்க ஆசைப்படவில்லை. கள நிலவரத்தைக் கண்டு பயந்து அவரே சரவணனை முன்னிறுத்தியதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில்  அ.தி.மு.க.விற்கு வந்தவர் என்பதால் தொண்டர்கள் ஆதரவு இல்லை.

செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா போன்றவர்கள் பணம் செலவழிக்காமல் வேடிக்கை பார்க்கிறார்கள். சரவணன் மட்டுமே இப்போது பணம் செலவழிக்கிறார். சரவணனிடம் பணம் இருக்கிறது என்பதும் நன்றாக செலவழிக்கக்கூடியவர் என்பதாலுமே சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

மூடியைத் திறக்காமல் பைனாகுலர் வழியே வெங்கடேசனை தேடுவதாக பொதுமேடையில் பேசி எல்லோருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறார்.

பா.ஜ.க.வின் சீனிவாசனுக்கும் மதுரைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் விருதுநகரை எதிர்பார்த்து காய் நகர்த்தி வந்தார். ஆனால், விருதுநகர் புதிதாக கட்சிக்கு வந்த ராதிகாவுக்குப் போய்விட்டதால் சீனிவாசன் ஏமாந்துவிட்டார். சீனிவாசன் பணம் வைத்திருந்தாலும் செலவழிக்க மாட்டார். எனவே சீனிவாசன் டெபாசிட் வாங்குவதற்கு டிடிவி தினகரன், பன்னீரின் சமுதாய வாக்குகள் கிடைத்தால் மட்டுமே நடக்கும்.  

சு.வெங்கடேசன் எளிதில் அணுகக்கூடிய நபர், எல்லா பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பவர், மதுரைக்கு நிறைய செய்திருக்கிறார் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. மாணவர்கள், தொழிலாளர்களிடம் நல்ல பெயர் உள்ளது.

இப்போது டாக்டர் சரவணனை சர்வகட்சி சரவணன் என்று அழைக்கப்படுகிறார். சீனியர் அ.தி.மு.க. நிர்வாகிகள் சரவணனை இன்னமும் அ.தி.மு.க.வாகவே பார்க்கவில்லை. அதோடு இங்கு ராமசீனிவாசனுக்கு தொண்டர்களும் வாக்கு வங்கியும் கிடையாது. ஆகவே, இரண்டு டம்மி வேட்பாளர்களைத் தாண்டி கடந்த தேர்தலை விட அதிக வித்தியாசத்தில் வெங்கடேசன் ஜெயிப்பார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link