Share via:
கரூர் மரணம் விவகாரத்தில் நேரடியாகவே செந்தில்பாலாஜி மீது தவெகவினர்
குற்றம் சுமத்தினார்கள். ஆனாலும், அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று திடீரென செந்தில் பாலாஜியை போலீஸ் தேடிய விவகாரம் வைரலாகிவருகிறது.
ஏதேனும் வழக்கில் செந்தில்பாலாஜியை விஜய் சிறையில் தள்ளுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சவுக்கு சங்கர், ‘’27 மே 2023 ல் வருமான வரித்துறை
அதிகாரிகள், செந்தில் பாலாஜி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியபோது,
ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் செந்தில் பாலாஜி தம்பி அசோக்கை தேடி, கரூர் காவல்
துறையினர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு வந்து தேடியிருக்கிறார்கள்.
கரூர் மாவட்ட காவல்துறையில், எஸ்பி முதல், ஏட்டையா வரை செந்தில்
பாலாஜி மற்றும், அசோக் உத்தரவின்படி மட்டுமே இதுவரை செயல்பட்டு வந்தனர். இவர்களை மாறுதல்
செய்தால் போதாது. ஒவ்வொருவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும்…’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 27.05.2023 அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர்
செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டபோது, வருமான
வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய
சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் நேரடியாக புகார்
அளித்த போதிலும், அப்போதைய ஆட்சியில் இந்த வழக்கின் விசாரணை முறையாகவும் நேர்மையாகவும்
முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தன. வழக்கின் உண்மையான
குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக,
விசாரணையின் திசையே மாற்றப்பட்டதாகவும், உண்மையை மறைக்கும் முயற்சிகள் நடைபெற்றதாகவும்
பல்வேறு தரப்பினரால் கேள்விகள் எழுப்பப்பட்டன.
தற்போது, இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கை தேடி
கரூர் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள், கடந்த
மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு எவ்வாறு கையாளப்பட்டது என்ற கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன.
உண்மையில் குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய காவல்துறை,
ஏன் இத்தனை காலம் அமைதியாக இருந்தது?
வருமான வரித்துறை போன்ற மத்திய அமைப்புகளின் அதிகாரிகள் தாக்கப்பட்டதாக
கூறப்படும் ஒரு வழக்கில் கூட உண்மை வெளிவர தாமதம் ஏற்பட்டிருந்தால், சாதாரண குடிமக்கள்
நீதியை எவ்வாறு நம்புவார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. வழக்கின் விசாரணை
ஏன் தாமதமானது யார் யார் தலையீடு செய்தனர் புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏன்
உடனடியாக விசாரிக்கப்படவில்லை, விசாரணையைதிசைதிருப்பும் முயற்சிகள் ஏதேனும் நடைபெற்றனவா
என்பன குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்கிறார்கள்.
அசோக்கை போலீஸ் தேடுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையான இலக்கு செந்தில்
பாலாஜி என்கிறார்கள். விரைவில் சகோதரர்கள் இருவருக்கும் ஆபத்து காத்திருக்கிறது.
