News

Follow Us

ஒரு காலத்தில் தமிழகத்தையே உலுக்கிய நிர்மலா தேவி செக்ஸ் குற்றச்சாட்டு வழக்கில், கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக பணியாற்றிவந்தவர் நிர்மலாதேவி. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர்கல்வித்துறையிலும் பெரும் செல்வாக்குடன் இருந்தவர். இவர், தேவாங்கர் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி உயர்கல்வித்துறைப் புள்ளிகளுக்குப் பாலியல்ரீதியாக அவர்களைப் பயன்படுத்த முயன்றதாகப் புகார் எழுந்தது. அதன்படி, பேராசிரியை நிர்மலாதேவியால் குறிவைக்கப்பட்ட மாணவிகள், அவர் பேசியதை ‘ரெகார்ட்’ செய்து பெற்றோர்கள் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்தனர்.

இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் முதல் அரசியலாளர்கள் வரை தொடர்பிருப்பது தெரியவந்து, தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே, வழக்கின் சுதந்திரமான போக்கு மற்றும் நேர்மையான விசாரணை கருதி பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு ஏப்ரல் 17-ம் தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே ஆளுநர் மாளிகையும் இந்த வழக்கோடு இணைத்துப் பேசப்பட்டது.

கல்லூரி செயலர் ராமசாமி, 5 மாணவிகள் கொடுத்த புகாரின்பேரில், அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து,கடந்த 2018 ஏப்ரல் 16-ம் தேதி நிர்மலா தேவியை கைது செய்தனர். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில், காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொழில் தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிமன்றத்தில் 1,160 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் 2018 ஜூன் 13-ம் தேதி தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் வழங்கப்பட்ட திர்ப்பில், ’குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். முருகன், கருப்பசாமி மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறியதால், அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள்’ என்று நீதிபதி அறிவித்தார்.

இதையடுத்து, நிர்மலா தேவி பலத்த பாதுகாப்புடன் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நிர்மலா தேவி குற்றவாளி என்றால் யாருக்காக அந்த குற்றம் செய்தாரோ அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link