Share via:
ஐஏஎஸ் அதிகாரி அமுதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக
வரும் தகவல்கள் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது. அமுதா ஐஏஎஸ் வருவாய் துறை செயலாளராகவே
தொடர்கிறார். அவரிடம் கூடுதலாக இருந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் பொறுப்பு
மட்டுமே முருகானந்தத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. அதில் உளவுத் துறை டிஜிபியாக இருந்த பாலநாகதேவி, சைபர் கிரைம் டிஜிபியாக
பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு உளவுப் பிரிவு டிஐஜியாக தர்மராஜன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வேலூர்
சரக டிஐஜியாக இருந்தார். சென்னை மாநகர டிஐஜியாக இருந்த பகர்ல செபாஸ் கல்யாண், உளவுத்
துறையின் இண்டர்னல் செக்யூரிட்டி டிஐஜியாக நியமிக்கப்படுகிறார்.
நெல்லை சரக டிஐஜியாக இருந்த பி.சரவணன் ஐபிஎஸ், சிஐடி உளவுத் துறையின் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
அது போல் திருவாரூர் எஸ்பியாக இருந்த கராட் கருண் உத்தரவ்ராவ், குற்றவியல் உளவுத் துறை
எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி எஸ்பியாக இருந்த மயில்வாகனன், சிறப்பு பிரிவு
சிஐடியின் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி எஸ்பியாக இருந்த மதன், பாதுகாப்பு பிரிவு சிஐடியின்
எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். கியூ பிரிவு எஸ்பியாக இருந்த சண்முகம், சென்னை சிறப்பு
பிரிவு சிஐடியின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அுத போல் மெட்ரோ மண்டல எஸ்பியாக
இருந்த மாதவன், பாதுகாப்பு பிரிவு எஸ்பியாகவும், சட்டம் ஒழுங்கு எஸ்பியாக இருந்த சிலம்பரசந்த்,
சிறப்பு பிரிவு எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் பாதுகாப்பு அதிகாரியாக
நியமிக்கப்பட்டிருக்கும் தர்மராஜன் ஐபிஎஸ் பற்றி பல்வேறு சிறப்புகள் வெளியாகியுள்ளன.
2009 ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரியான இவர், திருப்பத்தூர், குளச்சல்,
நீலகிரி உள்ளிட்ட இடங்களில் ரவுடிகளுக்கும் சட்டவிரோத செயல்பாடுகளிலும் ஈடுபடுவோருக்கும்
சிம்மசொப்பனமாக இருந்தவர்.
சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக பணியாற்றியபோதும் தன்னுடைய
சரகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தனித்தனியாக சந்தித்து, மீண்டும் குற்றச்செயல்களில்
ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து, அவர்களை தொடர்ந்து கண்காணித்து குற்றச்செயல்களை குறைத்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வில் இணைந்தார்.
மத்திய புலனாய்வு அமைப்பின் எஸ்.பி.யாக பணியாற்றியபோது, தென்மாநிலத்தில் பயங்கரவாதிகளால்
தீட்டப்பட்ட சதித் திட்டங்களை ரகசியமாக முறியடித்த பெருமைக்குரியவர்.
அதன்பின்னர், மீண்டும் தமிழக காவல்துறைக்கு திரும்பிய தர்மராஜன்,
சென்னை மாநகர காவல்துறையின் கிழக்கு மாவட்ட இணை ஆணையராக சிறப்பாக பணியாற்றினார். தமிழக
உளவுத்துறையை போன்ற சென்னை மாநகர காவல்துறைக்கென தனி உளவு அமைப்பு இருந்த நிலையில்,
அதனுடைய தலைமையை ஏற்றும் பல்வேறு முக்கிய பணிகளை செய்தவர் தர்மராஜன். கடைசியாக, வேலூர்
சரக டி.ஐ.ஜியாக பொறுப்பேற்று வழக்கம்போல தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்துகொண்டிருந்தவரின்
திறமையை கண்டு தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியாக தமிழக உளவுத்துறையின் டி.ஐ.ஜி-யாக விஜய்
நியமித்திருக்கிறார்
முதலமைச்சராக கடந்த 10ஆம் தேதி விஜய் பொறுப்பேற்க இருந்த நிலையில்,
இவருக்கான தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்தது, பதவி பிரமாணம் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பான
முறையில் சென்று திரும்பியது ஆகியவற்றின் பின்னணியில் ஜி.தர்மராஜன் ஐபிஎஸ் இருக்கிறார்.
இவை தவிர ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டாக்டர் தாரேஸ் அகமது, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அனு ஜார்ஜ் – கால்நடை பராமரிப்பு, பால் வளம்,
மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலராகவும் மரியம் பல்லவி பல்தேவ் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலராக நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
த.உதயச்சந்திரன் – தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் தலைவர்
மற்றும் நிர்வாக இயக்குநராகவும் குமார் ஜெயந்த் – தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித
நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.