Share via:
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது முன்னாள் முதல்வர்
கருணாநிதி மற்றும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மீது அவதூறாக பேசியதாக பதிவான
வழக்கில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர்
மீது சவுக்கு சங்கர் போன்று வெளியே வர முடியாத அளவுக்கு கடுமையான வழக்குகள் சேர்க்கப்பட்டு
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின்றன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தின் போது, கள்ளச்சாராயம் விற்பனை
செய்தவர் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த தி.மு.க. ஸ்டிக்கரைக் காட்டி, ‘இதைவிட வேறு என்ன
சாட்சி வேண்டும். ஸ்டாலினே விற்பனைக்கு உடந்தை என்பது போன்று நேரடி தாக்குதல் நடத்தியிருந்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, ‘பணமென்றால் பிணமும் வாயை பிளக்கும்
என்கிற பழமொழியில் எந்த பொய்யும் இல்லை. திமுக சார்பாக 200 கோடிக்கு மேல் ஒரு இடைத்தேர்தலுக்கு
செலவு செய்யப்பட்டிருக்கிறது திமுக சார்பாக வாக்கிற்கு 2000 ரூபாய் முதல் 4000 வரையும்
கொடுக்கப்பட்டுள்ளது
பாமகவும் தன் பங்கிற்கு 60000 வாக்குகளை குறி வைத்து 500 வீதம்
பட்டுவாடா செய்துள்ளது மக்கள் இரண்டு பக்கமும் வாங்கிக் கொண்டு சிரித்த முகத்தோடு தாராளமாக
82 % விழுக்காடு வாக்களித்துள்ளனர்’ என்று நேரடி குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இதையொட்டி, நெல்லை, வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த
சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். குற்றாலத்தில்
ஜாலியாக இருப்பதற்காகச் சென்ற துரைமுருகனிடம், ‘இடைத்தேர்தலின் போது முன்னாள் முதலமைச்சர்
கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழ்நாடு அரசு குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின்
அடிப்படையில் கைது’ என்று சொல்லி அழைத்துச்சென்றார்கள்.
ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் துரைமுருகன் மீது இருக்கிறது என்பதுடன்
அவதூறாகப் பேச மாட்டேன் என்றும் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து அவதூறு
பரப்பி வருவதால் இந்த முறை இவர் மீது நடவடிக்கை
கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது. சவுக்கு சங்கர் பாணியில் பல்வேறு வழக்குகள் ஒன்று
சேர்க்கப்படும், புதிதாக போடப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் சீமானுக்குத் தெரியப்படுத்தியதும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்.
நாம் தமிழர் ஆதரவாளர்கள் அனைவரும் ஆவேசமாக தி.மு.க.வுக்கு அர்ச்சனை செய்துவருகிறார்கள்.