News

Follow Us

தமிழகத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை ஒட்டியே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாகியிருக்கிறது. இதனை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் வெளியிட்டனர்.

தேசிய அளவில் சாதிவாரி, சமூக – பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை உயர்த்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான (இடபிள்யூஎஸ்) 10% இடஒதுக்கீடு அனைத்து சாதி, சமூகத்தினருக்கும் விரிவுபடுத்தப்படும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு அரசு பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய சமூக உதவிதிட்டத்தின்கீழ் மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித் தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்படும். ரூ.25 லட்சம் வரை, பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறும் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். மாநில அரசுகளுடன் கலந்துபேசி, புதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்யப்படும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இடபிள்யூஎஸ், சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பிணையின்றி ரூ.7.5 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும். 2024 மார்ச் 15 வரை வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

9-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு செல்போன்கள் வழங்கப்படும். மாநிலங்களின் விருப்பப்படி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். நாடு முழுவதும் ‘மகாலட்சுமி திட்டம்’ அமல்படுத்தப்படும். இதன்படி ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

2025 முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்து புதிய சட்டம் இயற்றப்படும். மீனவர்களுக்கான டீசல் மானிய உதவி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு நாள் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். தொழிலாளர்கள், மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க மாநில அரசுகளுடன் இணைந்து ‘இந்திரா கேன்டீன்கள்’ தொடங்கப்படும்.

புதிய ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் – ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கிடையாது: பண மதிப்பு நீக்கம், ரஃபேல் ஒப்பந்தம், பெகாசஸ் சாப்ட்வேர், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற குற்றவாளிகள் மீண்டும் கொண்டு வரப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். பாஜகவில் இணைந்த ஊழல்வாதிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி உள்ளனர். அவர்கள் மீதான வழக்குகள் விசாரிக்கப்படும்.

தற்போதைய ஜிஎஸ்டி சட்டங்கள் மாற்றப்படும். சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட கொள்கைகளின்படி புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்படும். இதன்மூலம் ஏழைகள் மீதான ஜிஎஸ்டி வரிச்சுமை நீக்கப்படும். வரி வருவாயில் மாநிலங்களுக்கு உரிய பங்கு வழங்கப்படும். முப்படைகளிலும் அக்னி பாதை திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய நடைமுறைப்படி வீரர்கள் சேர்க்கப்படுவார்கள்.

உணவு, உடை, திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் அவரவர் தனிப்பட்ட உரிமை பாதுகாக்கப்படும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் நிராகரிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, விவிபாட் ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்க்கப்படும் என்று எக்கச்சக்க அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link