Share via:
அ.தி.மு.க. கட்சியின் பெயர், பேரறிஞர் அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இரட்டைக்குழலாக இருந்த அ.தி.மு.க.வை தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக நடத்தி வருகிறார். மேலும் தான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதையும் தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக அறிவித்தார்.
இருப்பினும் அ.தி.மு.க. கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி அறிக்கைகளை வெளியிடுவது, கட்சிக்கூட்டங்களை நடத்துவது என அ.தி.மு.க.வை சேர்ந்தவர் போலவே இயங்கி வருகிறார்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றம் உரிமையியல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையும், உயர்நீதிமன்றமும் ஏற்கனவே அங்கீகரித்துவிட்டது. இருப்பினும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் என தன்னை ஓ.பன்னீர்செல்வம் கூறிவருவதாகவும், இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தையும், சர்ச்சகைளையும் கிளப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் அ.தி.மு.க.வின் கட்சியின் பெயர், இரட்டை இலை சின்னம், கட்சியின் கொடியை ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது மனு குறித்த விசாரணை இன்று நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.