Share via:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திடீரென்று கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் புகைந்து கொண்டிருந்த தீ தற்போது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பும் வகையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்த நிலையில் இருகட்சிக்கும் இடையில் விரிசல் தொடங்கியது.
இந்த நேரத்தில்தான் எடப்பாடி பழனிசாமி, திடீரென்று டெல்லிக்கு சென்று பா.ஜ.க. மூத்த தலைவரான அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டுவிட்டார். இந்த சந்திப்பு வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளிடையே இருந்த விரிசல் பெரிதானது.
இஷ்டம் இருந்தால் எங்களுடன் அ.தி.மு.க. இருக்கட்டும் என்று மேலும் தீயை பற்றவைத்தார் அண்ணாமலை. இதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது பா.ஜ.க. கிடையாது என்றும் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பகிரங்கமாக போட்டுடைத்தார்.
இந்நிலையில் பா.ஜ.க.வுக்கு எதிராக வேலூர் மாவட்டத்தில் போஸ்டர்க் ஒட்டப்பட்டதால் தற்போது அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், ‘‘பா.ஜ.க.வுக்கு எதிராகவோ, கூட்டணி குறித்தோ போஸ்டர் எதையும் ஒட்டக்கூடாது. மேலும் சமூக வலைதளங்களில் யாரும் கருத்து சொல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கூட்டணி நிலைப்பாட்டை ஏற்கனவே கூறிவிட்டதால் யாரும் இது குறித்து பொதுவெளியில் வாய் திறக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதே நிலைப்பாடு நிலைக்குமா, கூட்டணி குறித்த கருத்தில் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.