Share via:
காவிரி விவகாரம் குறித்துப் பேச பெங்களூரு வாருங்கள் என்று முதலமைச்சர்
விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு விடுத்ததை ஏற்று விஜய் கலந்துகொள்ள
முடிவெடுத்திருப்பது கடும் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது.
புது டில்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில்
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் தர முடியாதென
திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது கர்நாடக அரசு. இந்த நிலையில் விஜய் கர்நாடகா செல்வது
திட்டமிட்ட ஏமாற்று வேலை என்று கண்டனம் எழுந்துள்ளது.
இது குறித்து பேசும் சமூக ஆர்வலர்கள், ‘’காவிரிச்சிக்கலைப் பேச்சுவார்த்தையின்
மூலம் இனி தீர்க்க முடியாது எனும் நிலையை எட்டியப் பிறகுதான், தண்ணீர் தகராறுச் சட்டம்
– 1956ன்படி, 1990ஆம் ஆண்டு வி.பி.சிங்கின் ஆட்சியில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
1991ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில்
தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டுமென உத்தரவிட்டது. 2007ஆம்
ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழ்நாட்டுக்கு 192
டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டுமென உத்தரவிட்டது. 2018ஆம் ஆண்டு 177.25 டி.எம்.சி.
ஆகத் தண்ணீரைக் குறைத்தது உச்ச நீதிமன்றம். தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை
கர்நாடக அரசு வழங்குவதைச் செயல்படுத்த / கண்காணிக்க முறையே, காவிரி மேலாண்மை வாரியம்,
காவிரி ஒழுங்காற்றுக்குழு எனப் பலகட்ட படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம்.
இப்போது மறுபடியும் பேச்சுவார்த்தையின்
மூலம் தீர்வு எனக் கிளம்பினால், அது சிக்கலை இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கி
இழுக்கும் பேராபத்தாகும்.
தீர்ப்பும் நிவாரணமும் மீறப்படும் போது சட்ட அமைப்புகளைத்தான்
நாடவேண்டும். அரசுகள் மட்ட பேச்சுவார்த்தைக்கு போகவே கூடாது. தண்ணீர் பற்றாக்குறை காலத்து
பங்கீட்டு உத்தரவை வற்புறுத்தக்கூட தவெக அரசு சட்ட வழிமுறையை கையில் எடுத்ததாக தெரியவில்லை.
மேகதாது உள்பட எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிற வலைக்குள் விழுந்தால்
அது முப்பதாண்டுகளுக்கு முந்தைய தொடக்க நிலைக்கே கொண்டுபோய்விடும்’’ என்று எச்சரிக்கிறார்கள்.
ஆனால், விஜய் ரசிகர்களோ, ‘தலைவர் போய் தண்ணீருடன் வருவார்’ என்று
சவால் விடுகிறார்கள்.
ஆனால், விவசாயிகளோ, ‘’மாட்டிக்கொள்ள வேண்டாம் முதல்வரே. கொஞ்சமா
தண்ணீர் கொடுத்து ஏமாத்திடுவாங்க’’ என்று எச்சரிக்கிறார்கள்.
ஜனநாயகனுக்கு சோதனை.
