Share via:
மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தில் மாநிலங்களவையின் மாற்றுத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி. டாக்டர் கனிமொழி சோமு அவையை வழிநடத்தியது தமிழகத்தின் பெருமையை பறைசாற்றியுள்ளது.
மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா என்ற பெருமை பெற்றது. செப்.21ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதால் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டதுடன் அதற்கான விவாதமும் நடைபெற்றது. விவாதத்தின் போது, தி.மு.க. பெண் எம்.பி.க்களான கனிமொழி மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்கள்.
அதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் முன்வைக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த விவாதத்தின் போது அவையை வழிநடத்தும் மாற்றுத் தலைவராக தி.மு.க. எம்.பி.கனிமொழி என்.வி.என்.சோமு அமரவைக்கப்பட்டார். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த கனிமொழி சோமு, தி.மு.க.வுக்கு பெரும் பெருமையை சேர்த்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து கனிமொழி சோமு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக மாநிலங்களவை விவாதத்தை வழிநடத்தும் மாற்றுத் தலைவர் வாய்ப்பு இன்று கிடைக்கப் பெற்றேன். இதற்கான எங்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க. மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவுக்கும் நன்றி’’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.