News

Follow Us

கண்ட கண்ட நிதி நிறுவனங்களிலும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள் என்று எத்தனை எடுத்துச்சொன்னாலும் மக்கள் கேட்பதே இல்லை. வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்துவிட்டு பின்னர் லபோதிபோவென வயிற்றில் அடித்துக்கொள்கிறார்கள். அப்படியொரு சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது, தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனம். இந்த நிதி நிறுவன பணத்தை தேர்தல் செலவுக்காக பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் யாதவ் சுருட்டிவிட்டார் என்று பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. 150 ஆண்டுகள் பழமையான இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இந்த நிதி நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் ரூ.525 கோடிக்கு மேல் நிரந்தர வைப்பு தொகையாக உள்ளது. அதேபோல் மயிலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தங்களது பிள்ளைகள் அனுப்பும் பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிதி நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன.

அதன்படி சில ஆண்டுகளாக ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தேவநாதன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இயக்குநராக தேவ சேனாதிபதி, நிரந்தர நிதி செயலாளராக ரவிச்சந்திரன் ஆகியோர் தற்போது நிர்வாகிகளாக உள்ளனர். இந்த நிதி நிறுவனத்தில் குறைந்தபட்ச நிரந்தர வைப்பு நிதி ரூ.1 லட்சம் எனவும், அதிகபட்சமாக எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தலாம். செலுத்தும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீத வட்டி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் ஏராளமானவர்கள் முதலீடு செய்துள்ளனர்.

முதிர்வு அடைந்த பிறகும், ‘நீங்கள் கேட்கும் நேரத்தில் பணத்தை தர முடியாது. மற்றொரு நாள் வாருங்கள்’ என்று அலைக்கழிப்பதாகவும்  போலீசில் புகார் அளித்தால், உங்கள் பணத்திற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று நேரடியாக மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

தற்போது இந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடுவது தான். நிதி நிறுவனத்தின் மோசடிகளை மறைக்கத்தான் மோடியுடன் நிற்கிறார் என்றும் பொதுமக்கள் கூறி வருகிறார்கள்.

தேவநாதன் யாதவ் தற்போது பாஜ சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது சொத்து மதிப்பாக ரூ.206 கோடியை காட்டியுள்ளார். தமிழகத்தில் சொத்து மதிப்பு அதிகமாக காண்பித்துள்ள வேட்பாளர்களில் முதல் இடத்தை ஈரோடு தொகுதி வேட்பாளரும், இரண்டாவது இடத்தை தேவநாதன் யாதவும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆமாம், இதைப் பற்றி எல்லாம் வருமான வரித்துறை விசாரணை மேற்கொள்ளாதா..? அதுசரி, இந்துக்களின் பணம் என்பதால் மோடி வாங்கிக் கொடுத்துவிடுவார் என்றே நம்பலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link