News

Follow Us

கரூர் மாவட்டம், கரூர் சைபர் கிரைம் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் காணாமல் போன 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான 311 மொபைல் போன்கள் மற்றும் இணையதள மோசடிகளில் பாதிக்கப்பட்ட தொகை 1 கோடியே 7 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகரால்  பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது.

அதோடு இணையதளத்தைப் பயன்படுத்தி நடந்திருக்கும் சீட்டிங் குறித்து அதிர்ச்சி தகவல்களையும் கரூர் மாவட்ட காவல் துறையினர் பகிர்ந்துகொண்டனர். தன்னை தங்க முதலீட்டு ஆய்வாளர் என்று சொல்லிக்கொண்டு ஹாங்காங்கைச் சேர்ந்த ஏஞ்சலா என்பவர் கரூர்வாசி ஒருவரை இணையத்தில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அவர் இணையத்தில் தங்கம் வாங்குவது குறித்து தேடியிருக்கிறார் என்ற தகவல் அறிந்து அவரை தொடர்புகொண்டுள்ளனர்.

தங்களுடன் இணைந்து கோல்டு டிரேடிங் செய்தால் எக்கச்சக்கமாக லாபம் அடையலாம் என்று சில ஆதாரங்களைக் காட்டி சுமார் 64 லட்சத்து 81 ஆயிரத்து 846 ரூபாய் முதலீடு செய்ய வைத்துள்ளனர். அதன்பிறகு திடீரென அந்த நபர் தொடர்பு எல்லைக்கு வெளியே போயிருக்கிறார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் கரூர் காவல் துறையிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, தனிப்படை அமைத்து இயக்கிய காவல் துறையினர் சுமார் 169 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், ஒவ்வொரு வங்கிக் கணக்குகளுக்கும் நாள்தோறும் ஆயிரம் பக்க அளவுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

கோல்டு டிரேடிங், லோன் அப்ளிகேசன்கள், கேமிங் அப்ளிகேசன்களை இன்ஸ்டால் செய்யும் நபர்களின் தகவல்களைத் திருடி அவர்களிடம் முதல் கட்டமாக சீனர்கள் ஆசை வார்த்தைகள் கூறி பேசுகிறார்கள். வெளிநாட்டில் இருந்து அதிகாரபூர்வ நிறுவனத்தில் இருந்து சீனர்கள் பேசுவதாகச் சொல்லி நம்பிக்கை கொடுக்கிறார்கள்.

அதன்பிறகு அவர்களுடைய இந்திய ஏஜெண்ட்கள் மூலம் பல இடங்களில் கரண்ட் அக்கவுண்ட் ஓப்பன் செய்து பெங்களூர், டெல்லி, மும்பை போன்ற இடங்களில் கம்பெனி இருப்பதாகச் சொல்லி கணக்குகளைக் காட்டி ஏமாற்றியிருக்கிறார்கள். இதற்காக சாதாரண மக்களுக்கு கமிஷன் கொடுத்து அவர்களுடைய வங்கிக் கணக்கை பயன்படுத்தியும் மோசடி செய்திருக்கிறார்கள்.

மேலும், பெங்களூரில் ஜமீர்ஷா பிலாகி என்பவர் மூலம் பல போலி கம்பெனிகளை உருவாக்கி அவர்களிடம் 500க்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு எடுத்து, அவர்கள் மூலமாகவும் போலி கம்பெனி உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு சீன மொழிபெயர்ப்பாளர் பியூஸ் குமார், ஹெச்.ஆர்.காமராஜ், கலெக்‌ஷன் ஏஜெண்ட் தர்சன் சவுக்கன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் மூலம் சீனர்கள் இந்தியாவில் போலி கம்பெனிகளை உருவாக்கி, அந்த கம்பெனி பெயரில் சிம் கார்டு வாங்கியும் பல வங்கிகளில் கணக்கு தொடங்கியும் பொதுமக்களிடம் பல்வேறு வகையில் பணத்தை ஏமாற்றியுள்ளனர். இப்படி இந்தியர்களை ஏமாற்றி சுருட்டிய கோடிக்கணக்கான பணத்தையும் அவர்கள் நாட்டுக்கு வாலட் மூலம் அனுப்பியிருக்கிறார்கள்.

ஆகவே, இணையத்தில் தங்க பிசினஸ், கடன் தரும் செயலி மற்றும் லாபகரமான டிரேடிங் என்று சொல்பவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link