Share via:
சென்னை மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டுள்ள நிலையில் புதிய கலெக்டராக ரஷ்மி சித்தாரத் ஜகடே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த அருணா தற்போது நீலகிரி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் ரஷ்மி சித்தார ஜகடே, சென்னை மாவட்ட புதிய கலெக்டராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்புச் செயலாளர் ஹனீஷ் சாப்ரா, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் கூடுதல் கலெக்டராக (மேம்பாடு) மற்றும் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட அதிகாரியாக இருந்த சித்ரா விஜயன், தற்போது தமிழ்நாடு ஊரக மாற்றுத்திட்ட தலைமைச் செயல் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுளளார். இவர் கூடுதலாக தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட இயக்குனராகவும் பணியாற்றுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளரான நந்தகோபால், தற்போது ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.