Share via:
தமிழகத்தில் இன்னும் 12 வாரங்களுக்குள் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி ஆட்டே கட்டணத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு குறித்த விசாரணை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு தொடங்கியது. தமிழக அரசு சார்பில், மற்ற மாநிலங்களில் உள்ள ஆட்டோ கட்டண விகிதத்தையும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் போக்குவரத்துத் துறை இணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைக்கும் குழுவில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர், நுகர்வோர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில், இந்த பரிந்துரைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் வாதம் முன் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இன்னும் 12 வாரங்களுக்குள் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்கள் நலசங்கத்தினர் மற்றும் ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனரும் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.