Share via:
சிறையில் இருக்கும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சிறைக்கு உள்ளேயும், வெளியே அவரது மனைவி மற்றும் மகனும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 3ம் தேதி போலீசார் கைது செய்யப்பட்டார். ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
2024ம் ஆண்டு ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் சிறையில் தவித்து வரும் சந்திரபாபு நாயுடு சிறைக்கு உள்ளேயும், அவரது மனைவி, மகன் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் வெளியேயும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் ஆந்திரா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் கே.அச்சன் நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தேசத்தின் மக்கள் பல ஆண்டுகளாக ஜனநாயக கூட்டமைப்பில் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர். ஆனால் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு அரசியல் சாசனத்தை கேலிக் கூத்தாக்கும் வகையில் நடந்து கொள்கிறது. எனவே அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆந்திராவில் மேலும் பதற்றமான சூழ்நிலை உருவாகும் என்பது தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது.