News

Follow Us

நாடா

மீண்டும் திருமாவளவன் நாடாளுமன்றத் தொகுதியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி அடைந்தார். மோடிக்கு எதிராக தீவிரம் காட்டிவரும் திருமாவளவனை எப்படியும் இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

அவரது அறிக்கையில், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலானது, நமது நாடு எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. பாசிச பாஜக.-ஆர்எஸ்எஸ். கும்பல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி தனது இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றுவதற்காக எல்லாவிதமான சதிச்செயல்களையும் சதித்திட்டங்களையும் அரங்கேற்றி வருகிறது.

அந்த வகையில், பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சகோதரர் திருமாவளவன் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருக்கிறது. அதோடு, திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகள் மேற்கொண்டு வந்த திமுக நிர்வாகிகள் வீடுகளிலும், வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்து வரும் நிலையில், அவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ இப்படியாக சோதனை நடத்தவில்லை. ஆனால், திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் எந்த முகாந்திரமும் இன்றி வருமான வரித்துறை சோதனை நடந்திருப்பது கண்டனத்துக்குரியது. வருமான வரித்துறை சோதனையின் வாயிலாக, அவரை உளவியல் ரீதியாக அச்சுறுத்தி தேர்தலில் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என பாஜக நினைக்கிறது. தோல்வி பயத்தில் இருக்கும் பாசிசக் கும்பல், அனைத்து ஜனநாயக, சட்ட வழிமுறைகள் மீதும் நம்பிக்கையிழந்து, வெறிப்பிடித்து எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறது’ என்று கூறியிருக்கிறார்.

கடந்த தேர்தலைப் போலவே இப்போதும் பானை சின்னத்தில் இங்கு நிற்கிறார் திருமாவளவன். திருமாவளவனுக்கு எதிராக அ.தி.மு.க.வின் சந்திரகாசனும் பா.ஜக.வின் கார்த்தியாயினியும் நிற்கிறார்கள்.

இந்த நாடாளுமன்றத் தொகுதிக்குள் சிதம்பரம், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பா.ம.க.வுக்கு செல்வாக்குள்ள குன்னம், புவனகிரி தொகுதியில் பல இடங்களில்  திருமாவளவன் நுழையவே முடியாத அளவுக்கு வன்னியர்கள் ஆதிக்கம் இருக்கிறது. அன்றும் இன்றும் வேல்முருகன் ஆதரவு மட்டுமே இவருக்குக் கை கொடுக்கிறது.

அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை நம்பி பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் சந்திரகாசன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். எடப்பாடியின் தீவிர ஆதரவாளரான சந்திரகாசன் முதன்முதலாக தேர்தல் களம் காண்கிறார். மாவட்டச் செயலாளர் தாமரை ராஜேந்திரனின் ஆதரவு மட்டுமே உள்ளது. மாஜி அமைச்சர் வீரமணி தீவிரம் காட்டுவதாகத் தெரியவில்லை.

கடந்த 2011ம் ஆண்டு வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. மேயராக ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்ட கார்த்தியாயினி இப்போது பா.ஜ.க. வேட்பாளர்.  ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்த நீதிபதியை விமர்சனம் செய்து பரபரப்பு ஏற்படுத்தியவர். இவர் மாஜி அமைச்சர்கள் ஏ.எல்.விஜய், கே.சி.வீரமணி ஆகியோரை பகைத்துக்கொண்டதால் அ.தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்டார். அதன்பிறகு பா.ஜ.க.வில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

பா.ஜ.க.வில் சரவணகுமாருக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அண்ணாமலை ஆதரவில் கார்த்திகாயினி சீட் வாங்கியிருப்பதால் கட்சிக்குள் அதிருப்தி நிலவுகிறது. இவரது பேச்சு பல இடங்களில் பிரச்னையை உருவாக்கியுள்ளது. பா.ஜ.க.வின் சரவணகுமார், தடா பெரியசாமி ஆகியோர் திருப்தியாக இல்லை. பா.ம.க.வில் பொன்னுசாமி ஆக்டிவ் ஆக இல்லை.

இந்த தொகுதியில் திருமாவளவனுக்கு கட்சியை மீறி தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. வன்னியர்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் பா.ம.க. நின்றிருந்தால் போட்டி கடுமையாக இருந்திருக்கும். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர், கணேசன் ஆகியோர் திருமாவளவனுக்கு தீவிரமாகப் பணியாற்றுகிறார்கள். வேல்முருகன் தீவிரமாக களப்பணி ஆற்றுகிறார். அ.தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும்  உள்ள வாக்குகள் கணிசமாகப் பிரிவதால் திருமா எளிதில் வெற்றி பெறுகிறார். 

Add Your Heading Text Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link