Share via:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வருகிற 15ம் தேதி முதல் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகையாக மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் வருகிற 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டு வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டதில் தற்போது 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதன் தொடக்க விழா காஞ்சீபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையில் விழா நடைபெற உள்ளது என்றும் அறிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அதற்காக பிரத்யேகமாக அமர்த்தப்பட்டுள்ள அலுவலர்களிடம் இது குறித்து தங்கள் சந்தேகங்களை மகளிர் கேட்டுக் கொள்ளலாம் என்றும், மாவட்ட ஆட்சியர் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்துள்ள மகளிர், விரைவில் மறுபடியும் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அலுவல் பணிகள் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.