News

Follow Us

வளைகுடா நாடுகள் என்றாலே கடுமையான வெயில், வறண்ட வானிலை என்றாலும் அவ்வப்போது அதீத மழைப்பொழிவு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் மழையை சந்தித்துள்ளது.

வரலாற்றில் இல்லாத ஒன்றாக இடைவிடாமல் செய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் யுஏஇ மற்றும் ஓமனில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

துபாய் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு 120 மிமீ மழை ஒரே நேரத்தில் பெய்ததால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர். பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சாலைகள் மூடப்பட்டன. துபாய் ஏர்போர்ட்டில் வெள்ளம் புகுந்ததால் விமான சேவை அடியோடு முடங்கியது.

ஓமனில் வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானம் மூலம் போலீசார் மீட்டனர். நாடு முழுவதும் பதினெட்டு பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பள்ளி மாணவர்களும் பேருந்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மின்னல், வெள்ளத்தால் பஹ்ரைனும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும், பள்ளிகள் மூடப்பட்டன, மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

துபாயில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததற்கு காரணம் செயற்கை மழை என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் கடும் வெப்பநிலையை தாக்குபிடிக்க அவ்வப்போது செயற்கை மழை வரவழைக்கப்படும். வானில் விமானங்களில் இருந்து சில ரசாயனங்கள் தூவப்பட்டு செயற்கை மழை வரவழைக்கப்படும். இது மேக விதைப்பு எனப்படும்.

குடிநீர் உற்பத்திக்கும், நிலத்தடி நீரை பெருக்கவும் அவ்வப்போது இவ்வாறு செயற்கை மழை வரவழைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது அதிகப்படியான மேக விதைப்பு செய்யப்பட்டதால்தான் துபாயில் வரலாறு காணாத மழை கொட்டியிருப்பதாக டபிள்யுஏஎம் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

துபாய் சர்வதேச விமான நிலைய வானிலை தரவுகளின்படி, கடந்த 15ம் தேதி மாலையில் மழை தொடங்கியது. 20 மிமீ மழை பெய்திருந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மழை தீவிரமடைந்து நாள் முழுவதும் ஆலங்கட்டி மழை கொட்டியது. இதனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 142 மிமீ மழை பதிவாகி உள்ளது. துபாயின் ஓராண்டு சராசரி மழை அளவு வெறும் 94.7 மிமீ மட்டுமே. இப்படி ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால், விமானம் நிலையம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்தது.

மழை அரிதாக பெய்வதால் துபாய் சாலைகளில் பெரிய அளவில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படுவதில்லை. இதனால் அனைத்து முக்கிய சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. துபாய் மட்டுமின்றி பஹ்ரைன், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவிலும் மழை பெய்தது.

இந்த மழைக்கு முன்பாக கடந்த 14ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் 6 முதல் 7 மேக விதைப்பு விமானங்கள் பறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வாறு அதிகப்படியான மேக விதைப்பால்தான் ராட்சத மழை கொட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அந்நாட்டு அரசு இதனை இயற்கை நிகழ்வு என்றே சுட்டிக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link