Share via:
உயர்த்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணத்தை தற்காலிக நிறுத்தி வைப்பதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்னர் ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், 50 சதவீதமாக அதாவது ரூ.225 ஆக உயர்த்தப்பட்டது.
ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டி இருப்பதால் ஒவ்வொரு மாணவரும் ரூ.2,050 கட்டணமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதேபோல் டிகிரி பெறுவதற்கான கட்டணம் ஏற்கனவே ரூ.1,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1,500 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இறுதியாண்டு மாணவர்கள் செலுத்தவந்த பிராஜெக்ட் கட்டணம் தற்போது ரூ.600ல் இருந்து ரூ.900 ஆக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மாணவர்கள் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறும்போது, ‘‘உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில், தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த செமஸ்டரில் இருந்து இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்’’ என்று தெரிவித்தார்.
மேலும் ‘‘நடப்பாண்டு மாணவர்கள் ஏற்கனவே செலுத்திக் கொண்டிருந்த பழைய கட்டணத்தை செலுத்தலாம். கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டிருந்தால் அது மாணவர்களிடம் திரும்பி அளிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.